அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

39. பித்துலகீரே !

இவ்வாறு வள்ளலார் “ஏக்கந் தவிர்ந்தேன்; ஆக்க மடைந்தேன்; சிற்சபை யப்பனுக்குச் செல்வப் பிள்ளையானேன்!” என்று உலகின் இருட்பேய்களை ஓட்டியடிப்பார் ஒருகால். மற்றொருகால்,

மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி
யிருபிடியூண் வழங்கி லிங்கே உழவுக்கு
முதல்குறையு மெனவளர்த்தங்
கவற்றையெலா மோகோ! பேயின்
விழவுக்கும், புலா லுண்ணும் விருந்துக்கு
மருந்துக்கு மெலிந்து மாண்டார்
இழவுக்கு மிடர்க்கொடுங்கோ விறைவருக்குங்
கொடுத்திழப்ப ரென்னே யென்னே !

என்றவாறு இழிநடை பயிலும் உலகிற்கு ஏசுநாதர்போல எம் பெருமானும் சரியான சாட்டை கொடுத்துள்ளார்.

“பித்துலகீரே! கட்டோடே, கனத்தோடே, பட்டோடே மணியோடே வாழ்கின்றோ மென்று செருக்குரைப்பீர்; பசியோடு வந்தார் முகம் பாரீர்; காமாந்தகாரத்திற் கண்மூடித் திரிகின்றீர்; அற்ப மகிழ்ச்சி பெற்றீர்; பின் படு தீமையில் முன் படுகின்றீர்; துன்மார்க்க நடையிடைத் தூங்குகின்றீர்; பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீர்;

பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
புலைகொலைகள் புகுகின்றீர் கலகலவென் கின்றீர் கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
களியரெனக் களிக்கின்றீர் கருத்திருந்துங் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே !

என்று உலகை இருளினின்று ஒளிக்கும், சாவினின்று அமர வாழ்விற்கும், பொய்யினின்று உண்மைக்கும் அழைக்கும் அழுத்த மான ஆணித்தரமான ஆர்வமொழிகளன்றோ அருட் சோதியார் வாக்கில் விளையாடின ! அவ்வாறே பெண்களைப் பற்றி அவர் பேசிய உரை யெல்லாம் காமத்தை அடியோடு அருவருத்து ஒழிக்கவே யன்றோ? பெண்மையின் தெய்வத்தன்மை அறியாது கேவலம் புலன் விழைவையே நாடுந் தொழில் அருட்பா படிப்பவர் அடிச்சுவட்டையும் அஞ்சியோடும். இருளையோட்டி, அருள்வழி சேரவே வள்ளலார் உலகை அழைத்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !