
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
26. நமது பிள்ளை
இப்போது (1849) இருமொழிப் புலவர் ஒருவர் வருகிறார். தொழுவூர் வேலாயுத முதலியார், சென்னை மாகாணக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், ஆரியம் தமிழ் இரண்டிலும் வல்லவர். கரடு முரடான பண்டித நடையில் காரிகை பேரிகை முழங்கும் நூறு சிலேடைப் பாட்டுகளைத் தாமே பாடிப் “பழஞ் சுவடிகளிற் கிடைத்தன; சங்கப் புலவர் வாக்கு” என்று நம் அருட்புலவரிடம் நீட்டுகிறார். “இவை சங்கப் புலவர் சாற்றியதல்ல. அவர்கள் பாட்டில் இவ்வளவு குற்றங்கள் இரா. பொருளிலக்கணந் தேறாக் கற்றுக் குட்டி பாடியவை இவை” என்றார் உள்ளுணரும் அருட் புலவர். முதலியார் முகம் சுண்டி, செருக்கற்று ஓதாதுணர்ந்த ஒளிமணிப் புலவரான வள்ளலார் அடியில் உதிர்கனிபோல வீழ்ந்து தம்மை மன்னித்து ஆட்கொள்ள வேண்டுமென்றார். நம் பெருமானோ கருணையகங் கனிந்து, “நீ நமக்குப் புதியவனல்லன். மிகப் பழையவனே; நம் பிள்ளை நமக்கே கிடைத்தனை” என்று ஏற்றருளி அவருக்கு குமரவேள் உபாசனையை உரைத்தருளினார். அன்று முதல் முதலியார் கல்வி யறிவு வளர்பிறையானது. அவரே தலைமாணாக்கர். அவரே வள்ளலாருடன் இருந்து பணியாற்றி அருட்பாக்களையும் முதன்முதல் வெளியிட்டார். அடிகளுக்கு அடியார் அளவிலர். எனினும் அவர்களில் வீராசாமி முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, ஸ்ரீநிவாச வரதாசாரியார், ஞானசுந்தரமையர், பண்டார ஆறுமுக ஐயா முதலியோர் பெயர்கள் முன்னிற்கின்றன. இப்போது ஐயர் மிகவும் அரிய அருட்பாக்கள் பாடி யளித்தார். முதல் திருமுறையில் அடங்கிய சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவ மாலை, இங்கித மாலை முதலிய அரிய தேன்மலர்க் கொத்துகள் வள்ளற் பெருமானின் அருள்வனத்திற் பூத்தன.



