
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
13. சுப்பிரமணிய விளக்கம்
கந்தரனுபூதி பெற்ற எம்பெருமான் சுப்பிரமணிய தத்துவத்தை அடியில் வருமாறு விளக்குகிறார்:-
சுப்பிரமணியம் என்பதென்ன? நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி யிருக்கிறது. இந்த ஜோதி மணியைச் சண்முகமென்று பெரியோர் சொல்லுவார்கள். இதன்றி நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந் தாண்டி அனாகதமாகிய இருதய ஸ்தானத்தில், இடப்புறத்தில், ஆறு தலையுடைய ஒரு நாடி யிருக்கின்றது. இதைச் சுப்பிரமணிய மென்பார்கள். உன்மனிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள, ஆறுதலான சுத்தான்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்; ஆறு சோதி, ஆறறிவு ஆறு தலையுடையதா யிருப்பதால் ஆறுமுகம். தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு இரண்டாலாகிய விஷய நிர்விஷய உணர்வே இரண்டு கால்.
ஆறாதாரங்களிலுள்ள பிரகாச அப்பிரகாசமான பன்னிரண்டும் கைகள். அருட் சக்தியே வேல்; ஆன்ம விளக்கம் நாதம், மணி; கீர்த்தி கொடி; சரசிஜம் தயவு; குக்குடம் மாற்சரியமில்லா நிறைவு. பராகம் என்பது பாச நீக்கம்; தண்டம் வைராக்கியம்; பாணம் அன்பு; அபயம் சமாதான உணர்வு; மூலப் பிரகிருதியே மயில்; சர்வ தத்துவ கண்டனம் கடப்ப மாலை. அசுத்த அகங்காரமே சூரபத்மா; அடங்கியிருக்கும் இடமே படைவீடு. அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற் காரணமா யுள்ள துரியநிலையே மலை. சுத்த விவேக தத்துவ அனுஷ்டாதாவே சுப்பிரமணியம்.



