அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

50. அருட்பா வெளியானது

வள்ளற் பெருமானின்றிச் சென்னை யன்பர் வருந்தினர்; வருந்தி வருந்தி யழைத்தனர்; தம் அவதாரப்பணி, ஈண்டேயுள்ள தென்றறிந்த எம்பிரான், கருங்குழியிலேயே தமது வாழ்வுக் கற்பகத்தை நட்டார். ஆண்டே அருட்பாலூற்று கடலாகப் பொங்கி யெழுந்தது. இக்காலத்தில்தான் மூன்று, நான்கு, ஐந்தாவது, திருமுறைகள் பாடப் பெற்றன; கருங்குழிக்கு வருமுன்னரே இரண்டாந் திருமுறை பாடப்பெற்றது. வள்ளலார் அவ்வப்போது தில்லை சென்று தம் அருள் தந்தைக்கு நாளுக்கு நாள் அழகும் மணமும் மிகுந்த அருள்மாலைகளை ஏராளமாகச் சூட்டிவந்தார். இப்பாக்களின் அருமையும் அருட்பெருமையும், அன்பர் மனதை உருக்கின; அவற்றைத் தொகுத்து அச்சிட வேண்டுமென்னும் அவாவை வெளியிட்டனர். அடக்கமே உருவெடுத்த எம்பிரான் முதலில் சம்மதிக்கவில்லை. தம் பாடல்களை அச்சிட்டுப் பெருமை பெறவேண்டுமென்ற நினைப்பு ஒருசிறிதும் அப் படிகம்போன்ற உள்ளத்திலில்லை. புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், இருக்கம் இரத்தின முதலியார் முதலியோர், இருமொழிப்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு திருமுறைகளாக வகுத்து வெளியிட்டனர். உலகெலாம் உணர்ந்தோதி, உருகி, வாழ்வில் அமைத்து இன்பத் திருவருள் பெறுதற்குரிய இத்திருவாக்குகளைக் கண்டோரும் கேட்டோரும் கடவுட் காதல் மூண்டெழுந்து வள்ளற் பெருமானையும், அவர் வாக்கினின்று பாடிய உள்ளப் பெருமானையும் வாழ்த்தி வணங்க லாயினர்.

இப்போதும் வள்ளலார் தமது பணிவையே காட்டினார். புத்தகத்தில் திருவருட் பிரகாச வள்ளலார் என்று தம்மைச் சிறப்பித்த அன்பர் வேலாயுத முதலியாரை “ஏன்காணும், திருவருட் பிரகாச வள்ளலாரென்று உம்மை யார் போடச்சொன்னது?” என அதட்டினார். முதலியார் அருளாசான் முன் திகைத்தார். பிறகு “திருவருட் பிரகாச வள்ளல் (பதி, சிவன்) + யார்? என்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை” என்று பிரித்துக் காட்டி வள்ளலாரே சமாதானஞ் சொன்னார். தம்மைச் சுவாமிகள் என்றழைப்பதற்குக் கூடச் சம்மதிக்கமாட்டார் எம்பிரான் என்பது அவர்தங் கடிதங்களினின்று விளங்கும். அடக்கமே வடிவான வள்ளலார் உடல், எலும்பு, உயிர், உளம், உணர்வு, வாக்கு, நாக்கு, செவி, கண், கண்மணி, ஒளி, தன்னறிவு, இயல்பு…..அனைத்திலும் கலந்து தித்தித்துக் கற்பனை கடந்தோங்கும் சுத்த சிவ சன்மார்க்க பதியான சோதி நடராஜனுக்கே தம்மை யூணாக்கி முற்றும் தற்போத மிழந்து அருட் போதந் திளைத்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !