அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

11. அண்ணியின் கண்ணீர்

இவ்வாறிருக்கையில் தாயார் திவசம் வந்தது. அதை வழக்கம் போல் சபாபதி பிள்ளை பலவகைச் சிறப்புகளுடன் நடத்தினார். உற்றார், உறவினர், மற்றோர்களுக்கு வேண்டிய நல் விருந்தருத்தினார். விருந்தினர் எல்லாரும் உண்டு மகிழ்ந்து பரிமள களபம் பூசி இன்புற்றிருந்தனர். சபாபதி பிள்ளையும் தம்பியை நினைந்து ‘உடனிருந் துண்பதற்கில்லையே’ யென்று வருந்தினார். அண்ணியார் விருந்தினரை முகமலர்ந்து உபசரித்துக் காரியம் முடிந்தபின், மைத்துனச் சிறுவனை யெண்ணி வாட்டமுற்றவராய் உணவு கொள்ளாமல் சோர்ந்திருந்தார். சபாபதியும் கண்ணயர்ந்தார்.

மணி நான்கானது. நம் பெருமானார் வீட்டின் பின்புறம் மெல்லப் புகுந்தார். அண்ணியார் ஆவலோடு பிள்ளைப் பெருமானை ஏற்று, அலர்ந்த சோற்றை ஊட்டினார். அதையும் பொறுமையுடன் உண்ணும் எம்பிரானை நோக்கி அண்ணியார், ”அந்தோ எத்தனையோ பேர் இன்ப விருந்தருந்தி மகிழ்ந்தனர். இன்று வீட்டிற்குரிய நம்பி இவ்வாறு கள்ளத்தனமாக வந்து பதனழிந்த சோற்றை யுண்ணல் விதியோ!’ எனக் கருணையங் கண்ணீர் ததும்ப, அண்ணன் வந்துவிடுவாரோ என்னும் அச்சத்தோ டுண்ணும் பிள்ளையை நோக்கினார். அண்ணியார் அன்புக் கண்ணீரைக் கண்டு எம்பிரான் தாமும் விழி சோர்ந்து, “அண்ணி யன்னையே! ஏன் அலமருகின்றீர்?” என மீண்டும் மீண்டும் வினாவினார். “தம்பீ! எத்தனை நாள் இப்படிக் காணாமல் வந்து உண்டு செல்வது? அண்ணார் சொற்படி கல்வி கற்றால் இவ்வளவு இடர் இல்லையே. எனக்குப் பின் உன்னை யார் இவ்வளவு பரிவுடன் பேணுவர்? எனக்காகவாவது நீ கல்வியிற் கருத்தூன்ற வேண்டும்” என்றார். அன்பு மொழிகள் ஐயனை இணக்கின. “அன்னையே! தங்கள் மனங்கசிய யான் பொறேன். தங்கள் விருப்பப்படியே கல்வி கற்கிறேன். நாளையே மேல் மாடியில் ஒரு தனியறை அலகிட்டுத் தருக! அதில் யான் கல்வி பயில்கிறேன்” என்றார் இயற்புலவர்.

அங்ஙனமே கொடுக்கப்பட்டது. அங்குக் கல்வி கற்றாரா? இல்லை. பின்னே? முன்போலத்தான்! என்ன ? ஒரு நிலைக் கண்ணாடி வாங்கிச் சுவரில் மாட்டினார்; நறும்புகை போட்டார்; மலர் சூட்டினார்; கதவை யடைத்துக்கொண்டு தம்முள்ளே உள்ளபடியுள்ள அறிவு நூலை, முருகன் உள்நின்று உணர்த்த, ஓதலானார். கண்ணாடியையே கண் நாடி பார்த்திருந்தார்; அதில் தணிகை முருகன் இனிய வடிவு தோன்றியது; அதையே உபாசிக்கலானார். கந்தப் பெருமான் அருளால் எல்லாக் கலையறிவும் வளர் பிறை போல உள்ளே வளர்ந்தது. புறத்தே யுள்ளவர்களுக்கெல்லாம் ‘பையன் வீடு தங்கி நாளெல்லாம் படிக்கிறான்’ என்ற மகிழ்வு. ஆனால் எந்நூல் கற்கிறான் என்பது மட்டும் எவருமறியார். தன்னூல் கற்கின் எந்நூல் வேண்டும்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !