அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

56. வள்ளலார் தோற்றம்

இச்சோதிநிலை பெற்ற சுடர் மேனிப் பெருமான் பின்பு முயன்றதென்னை? பெருஞ் செயல் முயன்றார்—உலகெல்லாம் சாதி-மத-நிற-நாடு-குல வேற்றுமையின்றி அருட்சோதி வெளியிற் சேரும் பெருமுயற்சி செய்தார். அக்காலம் அவரை அறிந்து கொள்ளவில்லை. இருப்பினும் தமது தூய வாழ்வாலும், சோதி மொழியாலும் தாம் வந்த காரியத்தையும் அருட்சோதி பெறும் பயன்களையும் பல வகையில் மக்களுக்கு அவர் அறிவுறுத்தியே சென்றார்.

இப்போது இந்த அருள் வெள்ளம் நித்யானந்த நித்திரையிற் கலக்கும் காலம் வந்துவிட்டது. தம் உருமறையுங் காலத்தில் அவர் வாழ்வின் குறிப்புகள் சில நமக்குக் கிடைத்தன. அவற்றை ஈண்டு கூறுவாம்:-

வள்ளலார் சாதாரண உயரமுள்ளவர். நிமிர்ந்த மெலிந்த உடல்; எலும்புகள் தெரியும்; ஆயினும் வீரிய பலம் மிக்கவர். தெளிந்த மாநிற மேனி; நீண்ட மெல்லிய மூக்கு, சிற்கனல் பொறியும் விழிகள்; முகத்தில் சிறிது விசனக்குறி காணும். அது தமது அருட் சோதியனுபவத்தை உலகறிந்து, அருளாட்சி பெறும் பக்குவம் மாந்தர்க்கு இன்னும் வரவில்லையே என்பதற்கடையாளம். கடைசிக்காலம் முடி வளர்த்துக் கொண்டிருந்தார்.

இவர் சத்துவ குணத்திற் கறிகுறியான இரண்டு தூய வெள்ளை யாடைகளை அரையிலும் மேலும் அணிந்திருப்பார்; துவராடை அணிவதில்லை; கடும் நீராகார தபசி; துயில் நீத்தவர். இவர் இளைப்பாறி எவருங் கண்டதில்லை; இரண்டு மூன்று நாளைக் கொருதரமே அளவாகச் சில கவளங்கள் உண்பாராம்; இரண்டு மூன்று மாத காலம் வரை சிறிது பானகமே உண்டு உபவாசமிருப்பார்; நெய் முழுக்குச் செய்யும் நாட்களில் மௌனம் வகிப்பார். அன்று எத்தொழிலும் செய்யார். மனம் வருந்த நினைத்தலும் ஆகாதென்பது அவர் கருத்து. காலை வெயில் மேலே படாது போர்த்திருப்பார். காலை வெயில் புறப்படுமுன்பே வெளிக் கடன்களை முடித்துத் திரும்புவார். உயிர்கள் நசுக்குறு மென்று காலிலே கட்டை போடாது மெத்தெனத் தோலாற் செய்த செருப்புகளையே அணிந்திருந்தார்; சிறிதாக வாயில் உரோமம் படாதவாறு தம் மீசையைக் கத்தரித்து வைத்திருந்தார். எவ்வுயிரையும் தம்முயிர்போலெண்ணிப் பசியாற்றலும், கொலை நீக்கலும் செய்தார். அவர் திடீரெனச் சில காலம் மறைந்து பிறகு திடீரெனத் தோன்றுதலும் உண்டு. கை, கால், தலை வேறு வேறாகக் கிடந்து பிறகு எழுந்ததையும் சில அன்பர் கண்டிருக் கின்றனர்.

அவர் பிரணவ தேக மடைந்ததால், பலகால் முயன்றும் ஒளிப்படமெடுக்க முடியவில்லை. அவர் உரு அதில் விழவில்லை. பிறகு பண்ணுருட்டி யன்பர் ஒருவர் அடிகள் திருவுருவை யெழுதி யளித்தார். ‘பொன்னான மேனி மண்ணாயிற்றே’ என்று அதைக் கீழே போட்டார். நபி நாயகத்தைப் போலவே தம் உருவை வைத்து வணங்கக் கூடாதென வள்ளலார் விரும்பினார். அவர் தமக்கென எப்பெருமையும் விரும்பாத அடக்கம் பூண்டார்; கொல்லாமையை நீக்க முயன்றார். இவர் காந்த விழியிற் பட்டவர்கள் கொலை வழி விலகி அருணெறி பூண்டனர். தாயுமானவருக்கும் இவருக்கும் பல விதத்தில் கொள்கை யொற்றுமை யுண்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !