
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
55. அருட் பெருஞ் சோதி !
சித்திவளாகத் திருமாளிகையில் இடைவிடாத சிவஞானா னுபவத்தில் சகஜசுகானுபவ நிஷ்டையிலமரும் காலத்திலேதான் வள்ளலாரின் வாக்கு, செயல், நோக்கு, சித்தி அனைத்தையும் உள்ளிருந்து ஆற்றிய அருட்பெருஞ் சோதி காட்சியாகி அவருள்ளும் புறமும் சோதி வடிவானது. இதன் இன்பச் சிலிர்ப்பில் எழுந்த ஆவேச வூற்றே அருட்பெருஞ்சோதி அகவல். அதுவே வள்ளலாரின் இரகசியம், சக்தி, சித்தி விளக்கம் எல்லாம். அதுவே அருட்பாவிற்கு உயிர். இவ்வருட்சோதி யகவலே தைப்பூசத்தன்று ஞான சபையில் திருக்கண்ணாடியும் மணி விளக்கும் பிரதிஷ்டை செய்யும்போது ஆயிரக்கணக்கான அன்பர்கள் ஆர்வமுடன் பாடியது. இன்றும் உருக்கமுடன் அது பாடப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் பொருளை மனங்கடந்த விஞ்ஞானானுபவம் பெற்ற பூரண யோகிகளே அறிவர். சாதாரணமான ஹட், ராஜ, ஞான, பக்தி, கர்மயோக விதானங்களுக்கு இதன் உன்னதப் பெருமை எட்டாது. வள்ளலார் வருந் தருணப் பாட்டுகளிற் கூறிப் போந்த உண்மை பலித்தது. மனமாயைக் குழியில், இருளிடரில் நடைப்பிணங்களாகத் திரியும் மாந்தரை அருட் பெருஞ் சோதி வெள்ளம் பாய்ச்சி, அமர வாழ்வில் உய்க்கும் வள்ளலாரின் காரியத்தை இப்போது அணுப்பிசகாது அருளாண்டவன் உலகில் நிறைவேற்றி வருகின்றான். அவருரைத்த உயர்ந்த உண்மைகளை யறிய அக்காலம் அபக்குவமா யிருந்தது. வள்ளற் பெருமான் பணிவுடன் உருக்கமாக அருளுகிறார்:-
ஏதுமறி யாச்சிறிய பயல்களினுஞ் சிறியேன்
இப்பெரிய வார்த்தைதனக் கியானாரென் னிறைவன்
ஓதுகநீ யென்றபடி ஓதுகின்றேன்; மனமே,
உள்ளபடி சத்தியமீ துணர்ந்திடுக; நமது
தீதுமுழு துந்தவிர்த்தே சித்தியெலா மளிக்கத்
திருவருளாம் பெருஞ்சோதி யப்பன்வருந் தருணம்
ஈதிதுவே யென்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
எல்லாருங் களிப்படைந்துள் ளிசைந்தேத்தி யிடவே
என்று பலவாக அள்ளித் தெளித்த வருந் தருணப் பாடல் ஒவ்வொன்றும் உண்மை மணி! அந்த உண்மை நிறைவேறி வருகிறது! உலகறிய விளங்கும் !
அருட்பெருஞ் சோதி அகவல் முழுதும் கடவுட் சோதியினின்று தெறித்த அனுபவச் சுடர்கள். அதில் எல்லா வேத ரகசியமும் அடங்கியுள்ளது. அதற்கு உரை யெழுதொணாது. அவரவர் அனுபவித்தே, உள்ளுறைந்தே அதன் பொருளறிய வேண்டும்.
‘வானரசு உன்னில் இலங்குகிறது’ என்று ஏசுநாதர் அருளினார். அந்த வானரசும் வள்ளலார் ஓதிய அருளாட்சியும் ஒன்றே. அந்த அருளாட்சியே எல்லா மதங்களும் எதிர்பார்க்கும் பரிபூரண யோக சாம்ராஜ்யம். அதை உள்ளே அனுபவித்தவரே புறத்தே காண வல்லவர். அது தத்துவாதீதம்; சச்சிதானந்தப் பரவெளி யெனும் பொன்னம்பலத்தில் சமயங் கடந்து, காரணங் கற்பனை கடந்து, துரியங் கடந்த சுக பரிபூரணமாய், இயற்கை யுண்மையாய், சாகாக் கலாநிலயமாய், சக்தி மயமாய், எல்லாம் வல்லதாய் இலகும் பரஞ்சுடர். அதுவே எல்லாம் வல்ல யோக சித்திகளுக்கும் இருப்பு. மனமாயை இருள் நீக்கி அருளொளி நிரப்புவ ததுவே. ஐம்பூதங்களையும் ஆண்டு அதனதன் தன்மையா யிருப்பததுவே. வானிடைக் காற்றும், காற்றிடை நெருப்பும், நெருப்பிடை நீரும், நீரிடைப் புவியும், புவிமேற் படைப்பும், வித்திடை விளைவும் வகுத்தததுவே. ஒற்றுமை வேற்றுமை உரிமை களனைத்தும், உருவினில் அருவும், அருவினில் உருவும், அருவிலருவும், கரணம், இடம், கலை, வண்ணம், வடிவு, சிறுமை, பெருமை, மென்மை, திண்மை, அடி, நடு, முடி, அகம், புறம், சராசரம் ஆகிய எல்லாமும் அருட்பெருஞ்சோதி விளக்கமே. பெண்ணில் ஆணும், ஆணினுட் பெண்ணும், தனித்தனி வடிவிலும் ஆண் பெண்ணியல் அனைத்தும் வகுத்தது அருட்பெருஞ்சோதி. எப்படி எவ்வுயிர் எண்ணுமோ அப்படி யளிக்கும் அருட்பெருஞ் சோதியே தோற்றமாம் மாயைத் தொடர்பறுத்து, அருளாற்றலை யளிக்கும்; ஆணவ மழித்தே அனுக்கிரகம் புரியும்; எவ்வகை யுயிர்களும் இன்புற நிற்கும்; மாய வாழ்வில் செத்தார்போல் வாழும் மாந்தரை நித்திய ஆன்ம உணர்வில் எழுப்பி இறவா நிலை தரும்.
அது அதுவே. தானே தான், தானே எல்லாம். அது பரம் பரம்பரம். பரஞ் சிதம்பரம்; அவனோடவளாய் அதுவாய் அலதாய் நிலமிசை நண்ணிய சிவம்; அருளமுதம்; கருணையுள்ளத்தில் விளங்கிடும் மெய்விளக்கு. அதன் அருளுறின் எல்லாம் ஆகும். அருணெறி ஒன்றே அறநெறி யென்று அஃது இயம்புகின்றது. அருளறிவு, அருட்சுடர், அருட்சுகம், அருட்பேறு, அருள்வல்லபம், அருணிலை, அருள் வடிவம் எல்லாம் அருளி, உள்ளகத் தமர்ந்து உயிரிற் கலந்து சுத்த சன்மார்க்க சுக நிலையில் சத்திய சோதி வாழ்வளிக்கும் சாகாக் கலையதுவே. சிவ ரகசியம், பிரம ரகசியம், துரிய ரகசியம், சத்தியல், சித்தியல் ஆகிய எல்லாம் அது. கேட்டவை கேட்பித்து, காண்பவை காட்டிச் செய்பவை செய்வித்து, உண்பவை ஊட்டி, சாகாக் கலையின் திறமெலாம் பயிற்றி, எல்லா நிலைகளுக்கும் ஏற்றிய குருமணி அதுவே. அருளமுதூட்டி, அச்சங் கலக்கந் தவிர்த்து, சித்தி சக்தியளித்து, சக்தி நிபாதந்தனை யளித்து, தன்னிகரில்லாத் தலைவனைக் காட்டிடுந் தாய் அதுவே! துன்பெலாந் தவிர்த்து, அன்பு நிரப்பி, எல்லா நன்மையு மளித்து, அறிவிலாப் பருவத்து அறிவெனக் களித்து, அகத்தினும் புறத்தினும் அமர்ந்து இவ்வுலகில் ஒளி காட்டி, இணையிலாக் களிப்புற்றிடத் தன் பொருளனைத்தையும், தன்னரசாட்சியில் என் பொருளாக்கிய என் தனித் தந்தை அருட்பெருஞ் சோதி. தன் வடிவு, தன்னாட்சி, தன் சித்து, தன் தத்துவம் எனதாக்கித் தன் கையிற் பிடித்த தனி யருட் சோதியை என் கையிற் கொடுத்துத் தன் சக்தி வடிவும் யானும் ஒன்றெனக் காட்டி, தன்னுரு என்னுரு, தன்னுரை என்னுரை என்ற தந்தை அது.
அதுவே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பம். அச்சமுந் தளர்வும் நீக்கி, ‘துறை இது, வழிமுறை இது’ என்று விளக்கித் துணிவீந்த துணையதுவே. எனக்கு உயிரினுஞ் சிறந்த அருட்டுணையான நட்பு அதுவே. குணங்குறி யில்லா தென்னைக் கலந்த நட்பு அதுவே. அதுவே மனக்குறை நீக்கி என்றும் எனக்கு உறவானது. அது சத்து, உண்மை, துரியங் கடந்த பெரிய வான் பொருள்; என்று முள்ளது; எங்கும் நிறைந்தது; பல சக்தி சக்தர்களாய் விளங்குவது. உயிர், உடல், காண்பன, காட்சி, செய்வன, செய்வினை, அறிவன, அறிபவை, பலவாகும் இயற்கை விளக்கம் (சித்து) அதுவே. அவத்தைகளெல்லாங் கடந்த, அறிவுக் கறிவும் அதுவே. இயற்கையின்பம் (ஆனந்தம்) அதுவே. கரும்பும், கனியும், பாலும், தேனும் கைக்க இனிக்கும் கருதரிய அமுது அதுவே. அது என்றும் உள்ளது; என்னுயிர் உடல் உள்ளமெல்லாம் இனிக்க என்னுள் உள்ளது. அது ஞானத் தேன்; சக்தித் தேன்; நிறை சிவ அமுது; சச்திதானந்தத் தனிமுத லமுது; உலகெலாங் கொள்ளினும் உலப்பிலா அமுதம்; நினைத்தவை நினைத்தாங் கெய்தும் மணி. ஐந்து, எட்டு, ஆறு, நான்கென மொழியும் வேதாகம விரிவடங்கிய மந்திரம் அதுவே. இருந்தவரை எழுப்பும் வல்லபம் அதற்கே யுண்டு; நரை திரை மூப்பிலாது, என்றும் இளமையோ டிருக்க ஞானமாம் மருந்தாவது அதுவே. எடுத்தெடுத் துதவினும் என்றுங் குறையாது வளர்ந்து, நான் மறக்கினும் என்னை நீங்காது, எண்ணியதெல்லா மீயும் பைம்பொன் அதுவே.
அது எல்லா நிதியும் வளரும் கற்பனை கடந்த கருணைமா நிதி, நற்குண நிதி, சற்குண நிதி; உரைமனங் கடந்து துரிய மேல் வெளியில் துலங்கும் சோதி மாமலை; அருளானந்தக் கடல்; தீஞ்சுவை யூற்று; கோடை வாய்க் குளிர்நிழல்; மேடை வாய் மென்கால்; செவ்விள நீர், கட்டி மாம்பழம், கனியெலாங் கூட்டிக் கலந்த தீஞ்சுவை; உவர்ப்புறா தினிக்கும் உயர்மலைத் தேன்! சுக மணமலர், யாழிசை, ஏழிசை, வேதகீதம், என் கண், களிப்பு, தவம், பொருள், பலன், வாழ்வு, குலம், புலம், வரம், தரம், திறம், சிரம், என் தனி அன்பு எல்லாம் அதுவே. மனங்கனிய, மதி நிறைந்தொளிர, என்னுளத்தெழுந்து என்னுட் பழுத்த புத்தமு துணவு; தன்னையே எனக்கீந்த அன்பு, எனக்குப் பொன்னுடம்பு பொருந்திட என்னுளே யெழுந்து என்னுளங் கலந்த அன்பு. ஆணவ இருளற என்னுள் ஏற்றிய விளக்கு. என் செய்தவம் பலித்த திருவளர் நிறைமதி.
பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்றும்
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே !
நலந்தர வுயிருடல் நல்லறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே !
ஆதியு நடுவும் அந்தமுங் கடந்த
சோதியா யென்னுட் சூழ்ந்தமெய்ச் சுடரே!
உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே !
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் சோதி !
சாகாக் கல்வியின் தரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையும் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித் தருட்பேரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
ஓருரு வாக்கியான் உ உன்னிய படி யெலாம்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற அழியா அருளமு
தளித்தனை யருணிலை யேற்றினை அருளறி
வளித்தனை யருட்பெருஞ் சோதி !
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
போற்றிநின் பேரருள்! போற்றிநின் பெருஞ்சீர் !
ஆற்றலி னோங்கிய அருட்பெருஞ் சோதி !
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி !
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி !
இதுவே சுருக்கமாக அருட்பெருஞ் சோதியின் உரு, திரு, விரிவெல்லாம். உரையால் உரைக்கத்தக்கது இவ்வளவே. மனிதனுக்கும் விலங்கிற்கும் எவ்வளவு வேற்றுமை யுள்ளதோ அவ்வளவு இந்த அருட்பெருஞ் சோதி யாளனுக்கும் சாதாரணமான மனிதனுக்கும் உள்ளது.



