அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

40. தில்லையப்பா !

சவலைப் பருவத்திலேயே தம் உள்ளத்தை யீர்த்து “நீ என் மைந்தன்” என்று அறிவுறுத்திய தில்லையப்பனின் உள்ளழைப்பு வந்தது. தமது 24-ஆம் ஆண்டில் அடிகள் பொன்னம்பலத்தைக் காணப் புறப்பட்டார். நோயுற்றிருந்த தம் இளைய சகோதரர் பரசுராம பிள்ளையையும் சிதம்பர தரிசனம் செய்விக்க உடன் அழைத்துச் சென்றார். மதுரை சிதம்பர சுவாமிகள், வீராசாமி நாயகர், சுந்தரம் பிள்ளை முதலிய அன்பரும் அடிகளுடன் சென்றனர். வள்ளலார் புலவர் வாழும் புதுவையில், தருமலிங்க செட்டியார் போன்ற சித்தாந்தச் செல்வர்கட்குச் சில ஐயங்களைத் தீர்த்துப் பிறகு தில்லை சேர்ந்தார்.

அப்பனைக் கண்டார் அருட் பிள்ளை. செப்பருங் காதலால் விம்மினார்; வேசற்றார்; எல்லையில்லாத் தில்லைக் கூத்தன் உள்ள மன்றில் நடமிடக் கண்டார். இடையறாது அன்பினெழுந்த அருண் மலர்மாலையைத் தமது திருவாக்கால் தொடுத்துத் தொடுத்து அருட் பெருஞ்சோதி யப்பனுக்கு உள்ளங்குளிரச் சூட்டினார். “பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா! பத்தர் மனம் தேன் வாழையெனத் தித்திக்கும் இன்பனே! உன்னடி பிடித்தேன்; இனி விடமாட்டேன்; உன்னைப் பிரிந்து துன்பப்பட மாட்டேன்; கண்ணனையோய்! கரும்பின் இனிய கருணையமுதே! துரும்பின் மிகச் சிறியேனின் பெரிய பிழை பொறுத்தருளிய அன்பை யென் சொல்கேன்! என் மனங் குடிகொண்ட குருவே! அன்னே, அப்பா, ஐயா, அரசே, அன்பே, அறிவே, அமுதே, அழியாப் பொன்னே, மணியே, பொருளே, அருளே, கருணா நிதியே, அருணாடகனே, அடியார் இதயாம்புயனே, சுடர் மாமணியே, சுகநாயகனே, அபயம்!அபயம்! இனிச் சிறு பொழுதுந் தாழ்த்திடல் வேண்டா…தாங்க மாட்டேன்! அநித்திய உலகினைப் பார்க்கவு மாட்டேன்! உனை யன்றி வேறு பேறு வேண்டேன்! என் அருட்பெருஞ் சோதி யப்பனே! உனை யன்றி உன்னேன் உணரேன் உரையேன்! கனியிற் சுவைபோல் என் மனத்தில் இனிக்கும் இனிப்பே! உன் பொன்னடிக் காட்பட்டேன். உனது ஜோதி கண்டல்லால் அருந்தவு மாட்டேன். காசு, பணம், கன்னியராசை, காணியாட்சியைக் கருதிலேன்! உனது திருவருள் நேசமே விரும்பினேன். என் உடலுயிர் நினது அடைக்கலம்; இனி நிகழ்வதெல்லாம் நின் செயல், என் செயலன்று. அகத்தோனே, புறத்தோனே, அணுவோனே, மகத்தானே, சகத்தானே, இகத்தானே, பரத்தானே, எம்மானே, மருந்தானே, விருந்தானே, சுத்த சிவசன்மார்க்கந் துலங்க என்னை யீன்றோனே, சரணம்! சரணம்! அருளரசே, அருட் குருவே, அருட்பெருஞ் சோதியே, தில்லையப்பா, சரணம்! சரணம் !

அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
ஆனந்த போகமே, அமுதே,
மணிவள ரொளியே, ஒளியினுள் ஒளியே
மன்னுமென் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே,
தூயவே தாந்தத்தின் பயனே,
பணிவுறு முளத்தே யினித்திட வெனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே!
அன்பிலே பழுத்த தனிப்பழ மென்கோ!
அறிவிலே அறிவறி வென்கோ!
இன்பிலே நிறைந்த சிவபத மென்கோ !
என்னுயிர்த் துணைப்பதி யென்கோ
வன்பிலா மனத்தே வயங்கொளி யென்கோ
மன்னுமம் பலத்தர சென்கோ !
என்புரி யழியாப் பொன்புரி யாக்கி
யென்னையாண் டருளிய நினையே.

அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
அளித்தெனை வளர்த்திட அருளாந்
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
தெய்வமே சத்திய சிவமே
இருட்பெரு நிலத்தைக் கடத்தியென் றனைமேல்
எற்றிய இன்பமே யெல்லாப்
பொருட்பெரு நெறியுங் காட்டிய குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !