
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
34. மஹாதேவ மாலை
பரம்பொருளின் உண்மை நிலையைத் தம்முள்ளே உணர்ந்து கண்டு கலந்து இன்புறும் அவருடைய உயர்ந்த பக்குவ நிலையை மஹாதேவ மாலையிற் காணலாம். மஹாதேவ மாலை தமிழ் வேதம்; ஒப்பில்லாத உபநிடதமணி. உபநிடதத்தைப் படித்து, மஹாதேவ மாலையையும் படித்தால் பழத்திற்குப் பின் பஞ்சாமிருதம் உண்பதுபோல உள்ளும் புறமும் இனிக்கும். எம்பிரான் அருளிய பாக்களில் மஹாதேவ மாலையே வாடாத பிரம்மஞானக் கற்பக மாலையாக நிலவுகின்றது. அஃது அனுபவத்தால் அறியத்தக்கது. அதற்குச் சொல்லும் எழுத்தும் உரைவிரிக்கொணாது. அதன் முதற்பாட்டிலேயே அவ்வரும்பெரு மாலையின் அழகுமணங் கமழ்கின்றது.
உலக நிலை முழுதாகி, ஆங்காங் குள்ள
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிய தாகிக்
கலக நிலை அறியாத காட்சி யாகிக்
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி,
யிலகுசிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி யிணையொன்று மில்லா தாகி,
அலகிலறி வானந்த மாகிச் சச்சி
தானந்த மயமாகி அமர்ந்த தேவே !
உலகெலாந் தனி நிறைந்த வுண்மை; யோகியர் அனுபவத்தில் உவப்பு; கலக்கமுறா உபசாந்த நிலை; அருள் ஞானக் காட்சி; இதய மலர் வீற்றிருக்கும் இன்பத் தேவு; வித்து, முளை, விளைவு, விளைவிக்கும் பொருள் எல்லாம் அவன்; அவன் வேதாந்த நிலை; சித்தாந்த வுண்மை; நாதாந்த வெளி; முத்தாந்த நடு; அனைத்திற்கும் முதல்; சமயநெறி யறியாத மௌன வியோமத்தில் வயங்குவோன்; தூலம், சூக்குமம், பரம், தற்போத நிவர்த்தி; ஆனந்த போதமாகி ஆனந்தாதீதத் தமர்ந்தோன். அவன் மதங்கடந்த வாய்மை; அவனே தாய், தந்தை, தனயன், தான், நான், சகலம், கேவலம், சுத்தம், சராசரம்; அண்டம், பிண்டம், பண்டம், பொன், மணி, போகம், புறம், அகம், புனிதம், மண், மலை, கடல், மதி, இரவி, முன், பின், நடு, முடி, கருணை முகில்; அரிதினுமரிது, பெரிதினும் பெரிது; பேதம் அபேதம்; உரு, அரு, உருவரு; குரு; ஆண், பெண், சிற்குணம், சிற்சுகம், குணரகிதம், வாசகம், வாச்சியம், வாசக வாச்சியங் கடந்த மௌனம்; பந்த பாசமுறாப் பதி; நாசமிலா வெளி, ஒளி, நாதாந்த முடிவில் நடமிடுந் தேவன்; பராபரன், பரம்பரன், அயன், அரி, அரன், மகேசன், சதாசிவன், நான், நானே நானாகும் பதம், தானே தானாம் பதம்; தான் நான் காட்டா அந்தரம். சகச ஞான வாணி, மந்திரம், பதம், வர்ணம், கலை, தத்துவம்; சுடருட் சுடர், சுகமயம், ஞானக் கொழுந்து, மெய்யறிவின்பமயம், எங்கும் பூரண நிறைவு, வான், வானுலவு காற்று, நெருப்பு, நீர், புவி, தாவரம், சங்கமம், ஊன், உயிர், உள்ளொளி, உள்ளுணர்வு, உணர்வு கலந்த தீஞ்சுவை யின்பம், கண், கண்மணி, கண் கலந்த கதிர், பண், இசை, பயன், அற்புத மோனப் புத்தகம், ஞானபோதம், போதாந்த பூரணம், தத்துவம், தத்துவாதீதம், யோகம், யோகப் பயன், யோகத்தி னோங்குந் தூய போகம், ஞான யாகம், யாகத்திறை, யாக விளைவு, அன்பர் போகம், மோகமழிக்கும் மோனம், கண், காட்சி, காண்போன், துரிய முடிச்சோதி; யோகர் மனக்குகை வாழுங் குகன். அருளருவி வழியும் ஆனந்தத் தனிமலை, உளங்கலந்து தித்திக்குஞ் செழுந்தேன்:
தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத் தடம்பொழிற்பூ மணம் வீசத் தென்றல் வீச வெண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேயின் இசைவீசத் தண்பனிநீ ரெடுத்து வீசப் பெண்ணமுத மனையவர்விண் ணமுத மூட்டப் பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோங்கக் கண்ணமுத முடம்புயிர்மற் றனைத்து மின்பங் கலந்துகொளத் தருங்கருணைக் கடவுட் டேவே !
சிவம் பழுத்த அனுபவம், சிதாகாசத்தில் பரம் பழுத்த நடத்தரசு, கருணைப் பழம் பழுத்த கற்பகம், மறைமுடிவினின்று கேளாமற் கேட்கின்ற கேள்வி, தற்போதத் தொழிவினிடை நிறைந்து பொங்கும் சிவானந்தப் பெருக்கு;
பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்து கலந் திடநிறைவாய்ப் பொங்கியோங்கும்
கங்குகரை காணாத கடலே, யெங்குங்
கண்ணாகக் காண்கின்ற கதியே, அன்பர்
தங்கநிழல் பரப்பிமயற் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவே, பூந்தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே, யெல்லாஞ்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே !
பற்றறியா முத்தர்தமை வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரம ஞானத் திருவருளாளர் உட்கலந்த சின்மயம்; கட்டகன்ற மெய்யறிவோர் மாயை விட்டகன்று, கருமமலபோத மொழிந்து, சுட்டகன்று நிற்க, அவரைச் சூழ்ந்து கலக்குந் துரியத் தேவு; உபநிடதங்க ளெல்லாம் ‘உபசாந்த நிலைக்கப்பாலுள்ள நின்னைக் காணோம்’ என்று வழுத்தா நின்ற தன்மயச் சின்மய சகசத் தேவு; பரவிந்து, பரநாத நிலை கடந்து, வெளி மூன்றுந் தெரிந்தும் நின் சின்மயஞ் சிறிதுந் தேர்ந்திலோ மென்று ஆகமங்கள் போற்றத் தனி நின்ற பரம் பொருளே! தானாகித் தானல்ல தொன்றுமில்லாத் தன்மையே !
மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
பித்தேறி யுழல்கின்ற மனத்தா லந்தோ
பேயேறி நலிகின்ற பேதை யானேன்;
வித்தேறி விளைவேறி மகிழ்கின் றார்போல்
மேலேறி அன்பரெல்லாம் விளங்கு கின்றார்
ஒத்தேறி உயிர்க் குயிராய் நிறைந்த எங்கள்
உடையானே யிதுதகுமோ உணர்கி லேனே.
அருள் வெளியில் ஆனந்த வடிவெடுத்தாடும் பெருவாழ்வே! மருள் வலையிலகப்பட்டு, இருட்டிற் கோலிழந்த குருட்டூமன் போல் தவிக்கின்றேன்; சகடக்கால்போல் மனம் எண்ணாத தெண்ணி யுருள்கின்றது; கல்லினுள் தவளை தனக்கும் உணவூட்டும் உனது கருணைநிலை யறியேன். பெற்றவளைக் காணாத பிள்ளைபோலப் பேதுறுகின்றேன்; குரங்கின் கை மாலை யெனக் குலைகின்றேன்;
கொம்பற்ற இளங்கொடி போல் தளர்கின்றேன்.
அருளுடைய பரம் பொருளே மன்றிலாடும்
ஆனந்தப் பெருவாழ்வே அன்புளோர்தந்
தெருளுடைய உளமுழுதுங் கோயில் கொண்ட
சிவமேமெய் யறிவுருவாந் தெய்வ மேயிம்
மருளுடைய மனப் பேதை நாயி னேன்செய்
வன்பிழையைச் சிறிதேனு மதித்தியாயில்
இருளுடைய பவக்கடல்விட் டேறேன்; என்னை
யேற்றுவதற் கெண்ணுகவென் னின்பத் தேவே !



