அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

45. சித்த சிகாமணி

அருட்சோதி நடராஜன் சித்தசிகாமணி; அவனையே வள்ளலார் உள்ளக் கோவிலில் வைத்து வணங்கினார்:-

அகவடிவை ஒருகணத்தே அனக வடிவாக்கி,
அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடியென் உளத்தே
முகவடிவந் தனைக்காட்டிக் களித்துவியந் திடவே
முடிபனைத்தும் உணர்த்தியொரு முன்னிலையில் லாதே
சகவடிவிற் றானாகி நானாகி நானுந்
தானுமொரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
சுகவடிவந் தனையளித்த துரையேயென் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.

“பதி, பரன், பரம்பரன், ஞானநிதி, ஆரணம், ஆகமம் ஆகிய அரும்பொருள், அறிவு, அனுபவம், காரணம், காரியம், காரண காரியங் கடந்த பெரும்பதி, அன்பர் உள்ளத்தமர்ந்த செல்வம், புத்தமுது, சத்தியம், இணையற்ற சிவன், அணையற்ற கடல், அறிவுக்கனல், துயர்க்கடல் கடக்கும் புணை நீயே! அம்மே, அப்பா, அரசே, சாகாக் கலையளித்த தயாநிதியே! உள்ளபடி யென்னறிவி லுள்ள பெருஞ்சுகமே, ஆதியந்தந் தோற்றாத அரும்பெரும் சோதியே, அச்சந் தவிர்த்து இச்சையெலாம் அளித்த அருளே, அன்பறிவே, அருட்பொருளே, அமுதே, ஆங்காரமற்றவரை நீங்காத கனிவே!” என்று தம் அருளப்பனை யெண்ணி உருகிய வள்ளலார் செய்த வழிபாட்டு நியமமென்ன? பாடிப், படித்து, பணிந்து, கேட்டு, அன்பு மாலையணிந்து, மனமுருகக் கண்ணீர் சொரிந்து, அழுது தொழுது ஆங்காரந் தணிந்து, அருள் பெருகும் நிலை ஒரு பாலிருக்க, மனதடக்கி மோனத்தில் சகஜ நிஷ்டையிலும் அவனை விடாது கலந்திருந்தார்.

படிப்படக்கிக் கேள்வியெல்லாம் பற்றறவிட் டடக்கிப் பார்த்திடலு மடக்கியுறும் பரிசமெலா மடக்கித் தடிப்புறுமூண் சுவையடக்கிக் கந்தமெலா மடக்கிச்
சாதிமதஞ் சமயமெனும் சழக்கையும்விட் டடக்கி

மடிப்படக்கி நின்றாலும் நில்லேனா னெனவே

வனக்குரங்கு வியப்பவென்றன் மனக்குரங்கு குதித்த

துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேயென் உளத்தே

சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே !

இதுவே உயர்ந்த வழிபாடு. அவனுக்கு முழுதும் அடைக் கலமாகி, இதயமன்றுள் நானற அவனுட் கலந்து அவன் நம்மை ஆண்டுகொள்ள விருப்பதே இன்பம். இதயமன்றுள் அவனைக் கண்டோர் எங்கும், எவற்றிலும், அவனைக் காண்பர். கல்லிலும் செம்பிலும் கண்ணுதலைக் காண்பர். இவ்வித அபர பக்தி (உரு வணக்கம்) பரபக்திக்கு வழிகாட்டும் உண்மையை நம் வள்ளற் பெருமான் வாழ்வினின்றே அறிகிறோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !