அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

19. குரு தரிசனம்

இராமலிங்கர் இங்ஙனம் சிவபெருமானை அல்லும் பகலும் நினைந்து கனிந்துருகிச் சித்தந் தெளிந்து சிவமாகி வரும் நாட்களில் ஒருநாள் தேரடித் தெரு வழியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார். ஆங்கொரு திண்ணையில் அவதூதர் ஒருவர் அமர்ந்து, அங்குப் போவோர் வருவோரின் மன விகாரங்களுக் கேற்ப “இதோ கழுதை, அதோ மாடு, அதோ பன்றி போகிறது!” என்று கூறிவந்தார். நம்பிரான் அவ்வழியே செல்லும் போதோ “இதோ உத்தம மனிதன் போகிறான்” என்று மகிழ்ந்தார். எம்பிரானார் அவரிடம் சிறிது உரையாடினார்; அன்றிரவே அவதூதர் அவ்விடம் விட்டுச் சென்றார்.

மற்றொரு நாள் வள்ளலார் சிவதரிசனஞ் செய்துவரும் போது, முன்செய் தவமும் அன்று குவிந்த அன்பும் உருவெடுத்தாற் போன்ற ஒரு பழுத்த சிவயோகியைத் தரிசித்தார். சிவபெருமானே அருள் வல்லபத்தால் அன்பனுக்காக ஆங்கு அவ்வண்ணம் மானும், மழுவும், நெற்றி விழியும், பிறையும், நதியுங் கரந்து அவ்வாறு தோன்றினார் போலும்! அந்தத் தவராஜர் காலடியில் வீழ்ந்து,

கருணைநெடுங் கடலென்கோ! கல்லாலின்
அடியமர்ந்த கடவு ளென்கோ !
அருணகிரிக் கருள்புரிந்த ஆறுமுகக்
குருவென்கோ! அமுத மென்கோ !
மருணலிய வருபிறவி மருந் தென்கோ !
அடியேன்கண் மணியென் கோ!
மெய்த் தெருணிறைந்த,
சிவகுருவே நின்றனையீண்
டெவ்வாறு சிந்திக் கேனே !

என்று இறைஞ்சிக் குறையிரந்து போற்றி செய்ய, அருட்குருநாதன் கடைக்கணித்து ஞானதீட்சை செய்து, சிவஞானம் போதித்து அன்பறிவிற் பழுத்த பக்குவக்கனியைப் பார்த்து “பரமன் உவப்பது பாட்டு; நாடோறும் பரமன் மீது அருட்பா பாடி வருக! எதற்கும் அஞ்சேல்!” என அபய மீந்து மறைந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !