
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
8. கந்தகோட்டத்தில்
இதுதான் நமது பெருமானின் பிள்ளைப் பருவக்கதை. தமது ஒன்பதாவது வயதிலேயே அவர் அகத்தியர் முதலான முனிவர் பாடல்களை ஓதாமலே பாடும் வளம் பெற்றிருந்தார். முறையாகப் பாடம் படிக்கவில்லையென்று வீட்டார் குறைசொல்லுகையில் நம் இளம்பிரான் புரிந்து வந்த தென்னே! அவர்கள் குறை சொல்லுகிறார் களென்று முணுமுணுத்தாரா? அவமதித்தாரா? தளர்ந்தாரா? இல்லை. உள்ளே ஆண்டவன் தூண்டிப் பொலிவித்த அருளறிவில் உறுதிகொண்டார். மற்றவர்களைப் போலக் கற்று, மற்றவர் போல வாழ்வை வயிற்றிற் கிரையாக்கவோ அவர் பிறந்தார்! அருளால் ஆருயிர் மக்களுக்கு அருள்நெறி விளக்கித் தமது இனிய அருட் பாலூற்றை யாழுங் குழலும் அமுதுங் கைக்கும்படியான தமிழிசையுடன் சுத்த சமரச சன்மார்க்க நதியாகப் பாய்ச்சி, உலகில் ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமையை நாட்டவன்றோ அவர் அவதரித்தார்! ஆதலின் அவர் இயல்பிலேயே தமது வாழ்வின் அருட்பணியில் கருத்தை நாட்டினார். செந்தமிழ்த் தெய்வமும், தகப்பன் சாமியும், குகனுமான முருகனை வழிபடு கடவுளாகக் கொண்டு, அன்பாலுருகி இன்பப் பாமாலை தொடுத்து மனமார அணிவித்து வந்தார். மாலைதோறும் கந்தப்பெருமான் கோயிலில் பரவசம் பொங்கித் ததும்பும் பாமாலை புனைந்து வழிபடும் நம் குமரனைக் காணலாம். நம் அருட்பெருஞ் செல்வர் முருகனைப் பலவகையால் மனமுருகி வழுத்திவந்த அருமையை ஐந்தாந் திருமுறையிற் காணலாம். கலியுக வரதனான முருகப் பெருமானிடம் நம் இளங்குமரன் உருகி வேண்டியதென்ன?
“தேசிக சிகாரத்னமே! நின்பதம் எனது உளத்தோங்கின், திருவும், நற்செயலும், திறனும், இன்பமும் ஓங்கும். வள்ளலே, உன் அன்பர் கூட்டத்தில் என்னைச் சேர்! என் தந்தையே, தாயே, என் அறிவே, என் இன்பமே! காமம், வெகுளி, லோபம், மோகம், மதம், ஆங்காரம், மச்சரம் முதலிய தீயர் என்னை அணுகா தருள்! நிராசை, சாந்தம், உதாரம், சுத்த மனம், அலைவற்ற சிவஞானம் இவற்றை அளித்தருள்!”
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்; பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டுமத மானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்; உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்; நோயற்ற
வாழ்வினான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
“நான் ஒருவரிடம் ஈயெனக் கேட்காது, கேட்டவர்க்கு இல்லையென்று சொல்லாதிருக்க வேண்டும். பிறர் பொருளை நயக்கக்கூடாது; பிறரைத் தீங்கு சொல்லாத் தெளிவும், உன் புகழ் பேசுவோர் உறவும் தருவாய்! அப்பனே, நின் சீர் பேசும்வாய் தெள்ளமுத முண்டுவந்த திருவாய்; நின்பதங் கருதும் நெஞ்சே சுக ரூபமானது. கந்தவேளே! என் உளமும் வசமில்லை; வினையும் விடவில்லை; துணையின்றி உற்ற துணையில்லை; இளையன் இவனுக்கு அருளவேண்டுமென்று உன்பால் இசைப்போரு மில்லை; ஏழையேனுக்கு நீ அருள் புரிந்தால் எதிர் நின்று தடுப்போருமில்லை; இரப்போர்க்கு நீ இல்லையென்பது மில்லை; உன் அருள் குறைவதுமில்லை; நீ வன்மனத்தவனுமில்லை; என் உயிர்க்குயிரே! எத்திக்குந் தித்திக்கும் இன்பமே, ஆனந்த போகமே, யோகமே, ஏகமே, முத்தி முதலே, மெய்ஞ்ஞான மூர்த்தியே! உன் அடியலாற் பிறரை நாடா விரதமே கொண்டேன். நின்னடி நம்பினோர் அவலப் படுவரோ?”
வன்பெருநெ ருப்பினைப் புன்புழுப் பற்றுமோ? வானையொரு மான்தாவுமோ?
வலியுள்ள புலியையோர் எலிசீறு மோ? பெரிய மலையையோர் ஈச்சிறகினால் துன்புற அசைக்குமோ? வச்சிரத் தூணொரு துரும்பினாற்றுண்டமாமோ?
சூரியனை யிருள்வந்து சூழுமோ? காற்றின்மழை தோயுமோ? இல்லை யதுபோல்,
அன்புடைய நின்னடியர் பொன்னடியை யுன்னுமவர் அடிமலர் முடிக்கணிந்தோர்க் கவலமுறு மோகமாம் வெகுளியுறு மோமனத் தற்பமும் விகற்பமுறுமோ!
தன்புகழ்செய் சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே !



