அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

48. ஐயாவின் பணிவு

இவை, கண்டோர் குறித்து வைத்த சித்துக்கள். காணாது இயற்றிய சித்துக்களோ கணக்கில. அடிகள் கருங்குழியில் தங்கிய 16 ஆண்டுகளும் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று அருள்மழை பொழிவதும், அன்பர்க்கிரங்கி அற்புத வல்லபத்தால் பிணி, துயர், அச்சம், இடர்களைக் களைவதுமாக இருந்துவந்தார். இத்தகைய சித்துக்கள் ஆயிரஞ் செய்தாரேனும் நம்பிரான் எள்ளளவும் அவற்றைத் தமவெனச் சொல்லார். “எல்லாம் திருவருட் செயல்; இவற்றை வெளியிடாதேயும்” என்றுரைப்பார். வள்ளற் பெருமானின் ஒள்ளிய தாழ்மையும் அவர் காட்டிய ஒரு சித்தென்றே சொல்ல வேண்டும். எல்லாம் அருளாண்டவன் செயல். எல்லாம் வல்ல சித்தன் தமதுடலிற் கோயிற் கொண்டால் எதுதான் இயலாது? தாமாக முனைந்து ஒருவருக்கு உபதேசங் கூட ஐயா செய்வதில்லை. திருச்சிற்றம்பல ஞானியார் என்றொருவர் ஒருநாள் ஐயாவிடம் அருளுபதேசம் வேண்டினார். ‘தாங்கள் துறவி; அடியேன் தங்களுக்கு உபதேசஞ் செய்தல் ஒவ்வொதென்றார்.’ ஞானியார் பிடிவாதமாக வணங்கினார். உடனே,

நின்னிலைமை என்னருளால் நீயுணர்ந்து
நின்றடங்கில் இந்நிலையே அந்நிலையை
யெய்துதிகாண்– முன்னிலையில் நிற்குருவி
னாட்டாதே யென்றுரைத்தான் ஏரகம்வாழ்
சற்குரு வென் சாமிநா தன்.

என்றொரு வெண்பா வரைந்து கொடுத்தனுப்பினார்.

சிலருக்குத் திருநீறுகூட அண்டையில் இருப்பவர் கையால் தரச் சொல்லுவார். தம்மை என்றும் பெருந்துறவி யென்றும் சித்த ரென்றும் நம் பெருமான் கூறிக்கொள்வதில்லை. தம்மை ‘சாமி, அருட்பிரகாசர்’ என்று அன்பர் வணங்குதலையும் அவர் விரும்பிய தில்லை. அன்பர் வள்ளலாரை “ஐயா” என்றே அழைப்பர். தம் அன்பர் எங்கும் ஏத்துரை யிசைக்க, அடிகளார் அவர்களை நோக்கி யுரைத்த தாழ்த் துரையாவது:-

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடுங் கேளீர்!
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்,
எல்லாஞ்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போல வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர்;
பூரண மெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவ மொன்றே

தன்னாணை யென்னாணை சார்ந்தறி மினீண்டே

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !