அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

அருட்பெருஞ்சோதி!

தனிப்பெருங்கருணை!

அருட்பிரகாசமாலை

திருப்பொதுவில் ஞானநடம் புரிகின்ற
தெய்வசிகா மணியின் சேயை,
இருட்குலத்தைப் பெருக்குகின்ற மடமையிடர்
மாற்றவந்த இரவி தன்னைக்
கருக்கணக்கில் லாதவனைக் காலனணு
காதகனல் மேனி யானை,
அருட்சமயத் தந்தைனை,அன்பருக்குத்
தாயானை யடைந்து வாழ்வாம்!

முருகென்னும் பொருள்விளங்கு முத்திளமை
யெழில்குலுங்கு முகத்தி னானைத்
தருணமழை போலடியார் தாகத்தைத்
தணிக்கின்ற தயைமிக்கானைக்
கருணைவிரி மனத்தானை, யெவ்வுயிருந்
தன்னுயிர்போற் கருது வானை,
குருமணியென் றுலகமெலாங் கும்பிடத்தக்
கோனைமனங் குறித்து வாழ்வாம்!

எத்தனையோ தத்துவங்கள் ! அத்தனைக்கும்
இசைவாகி யவற்றின் மேலாய்,
ஒத்துலகில் எல்லாரும் ஒருகுலமாய்
அருட்பொதுவிற் செழிப்புற் றோங்கச்
சுத்தசிவ சன்மார்க்க சங்கத்தை
முறைவகுத்த சோதி தன்னை,
சித்தெல்லாம் வல்லவனைத் திருஞான
தேசிகனைச் சிந்தை செய்வாம்.

ஊனுருவி, யுயிருருவி, யுள்ளுருவிப்
பாய்ந்தின்ப வூற்றெடுக்கும்
தேனருவி யாகிவளர் தெய்வீகத்
திருவருட்பா செழித்த வூற்றை,
மானவர்க்குப் புதுவழியும் புதுயுகமும்
புதுவாழ்வும் வழங்கி னானை,
வானரசைக் கொணர்ந்தானைத் துரியவள
நாட்டரசை வழுத்தி நிற்பரம்.

பித்துலகர் பிதற்றுகின்ற மதவாதச்
சூதுகளைப் பிறகிட் டோட்டிச்
சுத்தான்ம வொருப்பாட்டின் உரிமைநெறி
முதன்முதலிற் றுலக்கி னானைச்
செத்தாரை யெழுப்புகின்ற ஞானசஞ்
சீவியினை, அமர வாழ்வின்
வித்தகனைத் தமிழ்வேத மகரிஷியை
விளம்பியுளம் பொங்குவோமால்!

தினைத்துணையும் பேதமின்றிச் சீவகா
ருண்யவழி சேர்ந்து வாழ,
மனத்திருளை மாற்றியறி வானந்தத்
துரியமலை வள நாடேறி, நினைத்திடவும்
முடியாத நிலைக்குநம்மை
யழைத்தானை, நேரி லோர்நாள்
அனைத்துலகும் அறிவானைத் தமிழரின்னும்
அறியானை, யணிந்து வாழ்வாம்.

பலமதங்கள் ஒன்றெனவே வடக்கினிலு
மேற்கினிலும் பகரு முன்பே,
தலமுயருந் தமிழகத்தில் அருளான்மச்
சமரசத்தை நாட்டி னானை,
நலமுயருங் குருமணியை நவயுகத்து
நபிமணியை இன்ப மோங்கி
உலகுயருந் தவமணியை, உண்மையறி
வொளிமணியைப்போற்று வோமால்!

மருட்சமய வாதுகளும், மாமாலச்
சடங்குகளும், மண்ணைக் கௌவ
இருட்சாதி வேற்றுமைகள் இடர்செய்யும்
பிரிவினைகள் இரிந்து தேய, [செய்
பொருட் செறிந்த மணிவாக்கும், பொதுநலஞ்
புண்ணியமும் பூண்டெ ழுந்த
அருட்சோதி ராமலிங்கப் பெருமானின்
அடிமலர்கள் முடியில் வைப்பாம்!

இராமலிங்க ஜயந்தி
29-9-1935.

சுவாமி சுத்தானந்த பாரதியார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !