அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

36. பெண்களுக்கு யோகம்

ஆனால், எம்பெருமான் இல்லறத்தையும் பெண்களையும் வெறுப்பவரோ எனின், இல்லை. அருட்பாக்களில்,

புண்ணைக் கட்டிக்கொண் டேயதன் மேலொரு
புடைவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள் வாரிவர் கொள்ளிவாய்ப்
பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்;
மண்ணைக் கட்டிக்கொண் டேயழு கின்றவிம்
மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போங்கிழக்
கழுதை வாழ்விற் கடையென லாகுமே !

என்பன போன்ற செய்யுட்கள் பல, பெண்களை வெறுப்பன போலத் தோன்றும். அப்படியல்ல; அனைத்திலும் அருட்சோதி யாடலைக் கண்டுவக்கும் அருட்பெருமான் பெண்மையை யெள்ள வில்லை; காமக் குரோதாதிகளையே கண்டித்தார்; உலகில் மோகத்தால் மாந்தர் படும் வாதனைகளைத் தம் மேலேற்றிப் பிறர்க்காகத் தம்மையே இழிவு செய்து பாடினார்.

பன்முகஞ்சேர் மனமெனுமோர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்குமிட மெல்லாம் கொன்முகங்கொண் டடிக்கடி போய்க் குதியாதேயெனது குறிப்பின்வழி நின்றிடுநின் குறிப்பு நடவாது;
என்முனமோர் புன்முனைமே லிருந்தபனித் துளிநீ
யிம்மெனுமுன் அடக்கிடுவேன் என்னையறி யாயோ,
பின்முனென நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை யானே!

வள்ளலார் பெண்மையைப் பற்றி உயர்ந்த சமத்துவக் கருத்துடையார். ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும் உண்மையை அவர் வலியுறுத்துகிறார்.

“பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்கப்படல் வேண்டும். மேலும், பேதமற்று, அபேதமாய்ப் படிப்பு முதலியவற்றையும் சொல்லிக் கொடுத்தல் வேண்டும். தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரம காலத்தில் ஒத்திருப்பார்கள்” என்று உபதேசிக்கிறார். ஆண் பெண் சேர்ந்து வாழும் நியமங்களை அவர் தெளிவாக முறைவகுக்கிறார். வாழ்வாங்கு வாழும் இல்லற வாழ்வு முறையைத் தெள்ளத் தெளிந்த உரைநடையில் வள்ளலார் பளிங்கு போலக் காட்டி, ஆண் பெண் வாழ்வை அருட்சோதி வாழ்வாக்க முயன்றுள்ளார். வறட்டுச் சந்நியாசம் அவருக்குப் பிடித்தமன்று; ‘சந்நியாசம் கடு மனத்தருக்கே’ என்கிறார். அவர் கூறும் மொழிகளெல்லாம் அருள் பழுத்தொழுகி மாந்தர் மீது இரக்கங் கொண்டு உதவும் அறிவு மொழிகளே யன்றிப் பிறிதில்லை. தமக்கு இல்லறம் நடாத்த நேரமில்லை. ஆன்மாக்களின் மீது கருணைகொண்டு அருட்பா பொழியவும், அருட்பணி புரியவுமே ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டதனால் வேறு சிந்தனைக்கு இடமில்லை. ஆனாலும் நம் வள்ளற் பெருமானும் ஒரு பெரிய குடும்பத்தை அடக்கியாண்டே வந்தார்; அக்குடும்ப வரலாற்றைக் குடும்ப கோஷத்திற் காண்க!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !