அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

64. தீர்க்க தரிசனம்

இவ்வாறாக உடற்பாதுகாப்பு முதல் உயர்ந்த அருட்கலப்பு மட்டும் உள்ள ஒவ்வோர் அணுவையும் அளந்து அருட்பாவாகக் கொட்டித் தம் ஆர்வத்தை வற்றாக் கடல்மடையாகத் திறந்தார் வள்ளலார். அக்காலத்தில் அன்பர் சிலர் தவிர ஏனையோர் அதனை அறியவில்லை. வள்ளலார் ஒரு நூற்றாண்டிற்குப் பின்னே நடக்க வேண்டியதை முன்பே சொன்னார். இவர் சமரசம் பலருக்கு அருவருப்பா யிருந்தது. பழைய வாசனையின் தடிப்பும் ஆணவ மலமும் இந்த நறுமணப் பூந்தென்றலை நுகரவொட்டாது தடுத்தன.

ஆயினும், பெருந்திரளான கூட்டம் எப்போதும் அவரைச் சூழ்ந்திருக்கும். அற்புதச் சித்தர், அருட்பொழிவாளர், கனி தமிழ் வள்ளல், கசிந்துருகன்பர், அருணெறிப் பெருமான், உயிரிரக்கமே உயிரெனவுடையார் என்று மாந்தர் குழுமினரே யன்றி ஆன்ம நேய ஒருமைப்பாடு, சுத்த சமரச சன்மார்க்கம், அருட்பெருஞ்சோதி முதலிய பதங்கள் அவர்களுக்குப் புதியனவாகவே யிருந்தன. ஆனால், எல்லாம் அறிந்த வள்ளலார், தெய்வ சற்குருமணி தமது எண்ணத்தை நிறைவேற்றுவா னென்பதை முற்றும் உணர்ந்தார்.

“என் சொற்களை நீவிர் செவிமடுத்திலீர். மகாத்மாக்கள் அந்நிய நாட்டினின்று வந்து அவைகளை ஏற்றுப் போற்றுவர். இனிப் பத்து ஆண்டிற்குள் கலி புருஷன் செல்வாக்கு அடங்கிவிடும். புலாற் பழக்கம் நாளாவட்டத்தில் நின்றுவிடும். சாதிகுல சமய வேறுபாடுகள் ஒழிந்து, இந்தியாவில் சகோதர தர்மம் (சர்வ சமரச சன்மார்க்கம்) நிலைபெறும். அகிலமாம் அன்பே உண்மைக் கட _வுள். அதுவே உலகில் பூரண சமாதானமும் சமரசமும் நிலை நிறுத்த வல்லது. தம்முள் இலகும் கடவுட் சக்தியாம் அருட் சோதியை மனிதர் அன்பால் அறிந்ததும், இயற்கைச் சக்தியை மாற்ற வல்ல அற்புத வல்லமை பெறுவர். இச் சமரச சன்மார்க்க சங்கத்தில் அங்கம் வகிக்க நீங்கள் அருகரல்லீர். இச்சங்கத்தின் உண்மை அங்கத்தினர் வடக்கே வெகு தூரத்தினின்று வருகிறார்கள்.

நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை. என் போதனை களின் கருத்துப்படி நடக்கவுமில்லை. நான் சொல்வதைக் கொள்வ தில்லை யென்று திட்டப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் போலும்! என்றாலும் காலம் நெருங்கிவிட்டது. ருஷ்யா, அமெரிக்காவி னின்றும் வடக்கிருந்தும் இதர நாடுகளினின்றும் அறிவாளிகள் இந்தியாவிற்கு வந்து இதே அகில சகோதர ஒற்றுமை, ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பிரசங்கிப்பார்கள். நான் இப்போது வீணில் சொல்லும் உண்மைகளை அப்போது தெரிந்து மதித்து நடப்பீர்கள். வடக்கே வெகு தூரத்தில் வசிக்கும் அம்பல சகோதரர் இந்தியாவில் அநேக அற்புதங்களை நிகழ்த்தி நமது தேசத்திற்கு அளவற்ற நன்மை செய்வதைச் சீக்கிரம் காண்பீர்கள்” என்ற வள்ளற் குயில் இறுதி நாட்களில் பாடியது.

இந்தத் தீர்க்கதரிசனத்தின்படியே 1875-ல் இந்தியாவில் சகோதரத்வத்தின் பெயரால் ருஷ்ய நாட்டுப் பிளாவட்ஸ்கி அம்மையும், அமெரிக்க நாட்டு ஆல்காட்டும் பிரம்மஞான சபை ஏற்படுத்தினர். இம்மகானின் வரலாற்றையும், தீர்க்க தரிசனத்தையும் அறிந்த பிளாவட்ஸ்கி அம்மையார் 1882-ல் (Hints on Esoteric Theosophy யில்) எழுதியதன் சாரமாவது:-

“தியாசாபிகல் சபை ஆரம்பிக்க எங்களுக்குக் கட்டளை யிட்ட மஹாத்மாக்களுள் யோகி இராமலிங்கம் நிச்சயமாகவே சம்பந்தப் பட்டிருக்கிறார் என ஊகிக்க வல்லது. 1873-ம் ஆண்டு பாரிசுக்குப் போக உத்தரவு கிடைத்தது. ஜுனில் அமெரிக்கா ஐக்கிய நாட்டுக்குப் போகக் கட்டளை பிறக்கவே, ஜுலையில் சென்றேன். இச்சமயமே இராமலிங்கம் இனி வரும் சம்பவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். 1875-ம் வருஷம் நவம்பர் மாதம் பிரம்மஞான சபை ஏற்பட்டது. 1878-ம் வருஷத்திற்குப் பின்பே இந்திய நண்பருக்குத் தெரிவித்து, 1879-ம் வருஷம் பிப்ரவரியில் பம்பாய்க்குக் காரியாலயம் மாறியது. பிறகு அடையாற்றிற்கு வந்தது.” ஆனால், வள்ளலார் குறித்த ஆன்ம நேயம் தமிழ் நாட்டில் இன்னும் மௌனமாக யோக சக்தியால் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !