அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

65. திருவுரு மறைதல்

வள்ளற் பெருமான் ஐம்பது ஆண்டுகளும் ஐந்து திங்களும் தமிழுலகில் அருட் சோதியாக விளங்கினார்; அடிக்கடி தாம் மறையப் போவதாகச் சொல்லி வந்தார்; இறுதிக்காலத்தில் அன்பர்க்கு அரிய நெறியும் ஆறுதலும் புகட்டி வந்தார். ஆன்ம நேயத்தைப் பற்றி விரிவுரை பொழிந்தார்; கடைசி மூன்று மாதம், 1874-ல் மோனம் வகித்தார்; 1874 ஜனவரி முடிவில் பேசத் தொடங்கி அரிய உபதேசங்கள் செய்தார்; பிறகு சித்திவளாகத்தில் தமது சிறு குடிலில் உள்முகப்பட்டு அன்பர்க்கு அருளும் அன்பும் ஆசியும் ஈந்து,

செத்தாரை யெல்லாந் திரும்ப எழுப்புதலிங்
கெத்தால் முடியுமெனி லெம்மவரே—சித்தாம்
அருட்பெருஞ் சோதி யதனான் முடியுந்
தெருட்பெருஞ் சத்திய மீதே !

என்று அறிவித்தார்; சித்தீசுரர் இரண்டரைக் கடிகையில் புறப்படு வாரென்று அருளினார்; காலம் தமது உண்மையை அறிய இன்னும் கனியவில்லை யென்று அறிந்தார்.

பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலா மெய்த விசைத்தருளிச் செய்தனையே;

அச்சமெலாந் தீர்ந்தே னருளமுத முண்கின்றேன்;
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே

என்று இறுதியாய் அருளி, ஆனந்தாதீதத் திருந்து படுக்கையில் சாய்ந்து கொண்டார்; தமது உரு எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பின் பிரணவ தேகியாய் ஞானசம்பந்த குருத்வ நிலை பெற்று உலகெங்கும் சித்துக்கள் புரியும் குறிப்புணர்த்தித் தம்மை முற்றும் அறிவாக்கி ஒளியாக்கி அருவாக்கிவிட்டார். முன்பே உத்தரவுப்படி கதவுகள் மூடப்பட்டன. அறையிற் காற்றுப் போவதற்கும் இடமில்லை. சித்தி வளாகத்தைச் சுற்றி அன்பரும் அதிகாரிகளும் சூழ்ந்திருந்தனர். பின்பு கதவைத் திறக்கவே ‘திறந்தால் வெறுமைதான் இருக்கும்’ என்று வள்ளலார் சொன்னவாறே வெறும் வெளியாயிருந்தது. அங்கே ஒரு நித்திய விளக்கு இன்று எரிகிறது. அதுவே அந்த அருட்சோதி வள்ளலை நிலப்பூட்டுகிறது. ஆனால் வள்ளலார் சக்தி உலகெங்கும் நிறைந் துள்ளது! சொல்ல வேண்டுமா? இன்று சமரச சன்மார்க்க வேகம் எங்கும் பரவி எல்லார் மனதையும் ஈர்த்துள்ளதை யாரே அறியார்? ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைத் தமது அருள் வல்லபத்தால் உலகெல்லாம் கொண்டு செலுத்தும் சற்குருமணி வாழ்க !

அருட் பெருஞ் சோதி ! தனிப் பெருங் கருணை !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !