
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
24. மனுமுறை கண்ட வாசகம்
அல்லும் பகலும் ஆண்டவன்மேல் அருட்பா பொழிந்து, பல அரிய விஷயங்களைக் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தி, சதா கடவுளின்ப வுணர்வில் கரைகடந்து நிற்கும் நம் பெருமானைச் சுற்றிக் கடவுட் காந்தம் வீசித் தொடங்கியது. அக்காந்தம் மாந்தர் மனத்தை இழுத்துத் தனதாக்கியது. அருட்பா கேட்கக் கூடுவோர், அன்புக் காந்தத்தின் வசப்பட்டு ஆடிப்பாடிப் பரசவமாகக் கூடுவோர், இலக்கியங் கற்றுத் தெளியக் கூடுவோர், புதிய நூல்களை ஆக்க வேண்டி வருவோர், பழைய நூல்களைப் பார்வையிட வேண்டுவோ…இத்தகைய அன்பர்கள் அடிகளை எப்போதுஞ் சூழ்ந்திருந்தனர். இசைபெற்ற புலவர் சபாபதி முதலியாரின் வேண்டுகோட்படி அடிகளார் “மனுமுறை கண்ட வாசகம்” என்னும் மிகவும் அரிய உரை நூலைச் செய்து கொடுத்தார். அதன் நடைச் சிறப்பும் பொருட்சிறப்பும் தமிழுக்கே ஒரு சிறப்பு. அந்நூலை அனைவரும் போற்றி வரவேற்றனர். அது இன்றும் கலாசாலைகளிலும், பொதுவிலும் அனைவராலும் படிக்கப் பட்டு வருவதால் அதன் அருமை பெருமையை அன்பர் அறிவர். இளவரசன் வீதிவிடங்கன் ஊர்ந்து சென்ற தேர்க்காலிற் பட்டு இளங்கன்று ஒன்று இறந்ததைக் கேட்ட மனுநீதிச் சோழன் வருந்தும் உருக்கத்தைக் காண்மின்கள்:-
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ, தானங்கொடுப் போரைத் தடுத்து நின்றேனோ, கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ, மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ, குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ, ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ, தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ, களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ, பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ, வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ, பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ, கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ, கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ, அன்புடையவர்க்குத் துன்பு செய்தேனோ, தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ, சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ, தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ!” என்னும் அரிய வாசகங்கள் என்றும் புதிய நீதி மலர்களன்றோ?



