
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
41. சுந்தர சுவாமிகள்
இவ்வாறு வள்ளலார் கரையற்ற அருட்கடல் மடைதிறந்தது போலத் தமது உள்ளக் காதல் மடை திறந்து, அருட்பா வெள்ளம் பாய்ச்சித் தில்லையில் வடக்குச் சித்திர வீதியில் அமர்ந்திருந்தார். இவர் பெருமையறிந்த சுந்தர சுவாமிகள் என்பார் ஒருநாள் இவரைக் காணவந்தார். வள்ளற் பெருமானின் மாசறு காட்சியும் தேசுறு வடிவும், பேசரும் புலமையும், பேரருள் வாக்கும், அளவறுமன்பும், தெளிவுறு மொழியும், ஒளியுறு கண்ணும், களியுறு சிந்தையும், பழகப் பழகப் பாலினுந் தேனினும் பழத்தினுங் கண்டினும் உளத் தன்பினிக்கும் இனிய தூய வுறவும் சுந்தர சுவாமிகளைக் கவர்ந்தன. அன்பும் வணக்கமும் மிக்கு வள்ளலாருடன் சுவாமிகள் மன்றுளானைச் சென்று வணங்குவார். எஞ்சிய நேரமெல்லாம் ஞான விசாரத்திலேயே கழிப்பார். வள்ளலார் முன்னிலையில் ஒரு காந்த சக்தி உலாவுவதைக் கண்டு அன்னார் எதிரிருந்து பேசாது, பக்கத்தில் ஒதுங்கி யமர்ந்து பேசி வந்தார். அதைப்பற்றி அன்பர்கள் வினவவே, “எதிரிருந்து பேசுவோர் ஆற்றலை யிழுத்துக் கொள்ளும் ஆற்றலுடையார் அவர்” என்று உரைத்தார். தவமும் தூய்மையும், அருளும் ஆத்மானுபவமும் நிறைந்து சிற்சக்திக் காந்தமாக விளங்கும் பெரியோர் மின்சார மலை போன்றவர்கள். பெரிய காந்தம் சிறிய காந்தத்தை யிழுப்பதுபோல் அவர்களுடைய சத்திக்கதிர் முன் சிறு திறலாளர் நிற்க முடியாது.
வள்ளலாரின் வாக்கமுதைப் பருகிய சுந்தர சுவாமிகள் இது ஒரு திருவருள் வடிவு, எம்மை யாட்கொள்ள எழுந்தருளி யுள்ள தெனப் போற்றினார். அன்பும் அருளும் நட்டால் இன்பப் பெருக்கிற்கு எல்லை யுண்டோ! சுந்தர சுவாமிகள் இப்படி அன்புருகிச் சென்றபின், வள்ளலார் கண்ணீருகுத்து நின்றார். சீடர் என்னென வினவினர். “இப்போது அளவளாவிய சுவாமிகள் இன்னும் ஆறு மாதத்தில் மறைந்து விடுவார்” என்றார். அவ்வாறே நடந்தது. முக்கால முணரும் அறிவும் நம் பெருமானுக்கு அமைந்திருந்த தென்பதற்கு இது ஒரு சான்று.



