
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
30. கலங்கினேன் !
கோபம், காமம், கொடிய மோகம், தாமதம், உலோபம், மதம், மற்சரம், ஆங்காரம் இவை வருமோ எனத் தளர்ந்து ஆமை போல் அடங்கினேன்; கருத்து வேறாகிக் கோயில் புகுந்தால் வருத்தமே அடைந்தேன்; புன் புலாலுடம்பின் புணர்ப்பை ஏங்கினேன்; புலாலுண்போரைக் கண்டு எலும்பிளைத்தேன். வாதம் புரிந்துழி மதி கலங்கினேன்; பொருளைக் கண்டு இருளென நடுங்கினேன்.
பொருளிலே உலக மிருப்பதா தலினால்
புரிந்துநா மொருவர்பாற் பலகால்
மருவினாற் பொருளின் இச்சையாற் பலகால்
மருவுகின் றானெனக் கருதி
வெருவுவ ரெனநான் அஞ்சியெவ் விடத்தும்
மேவிலேன் எந்தைநீ அறிவாய்;
ஒருவுமப் பொருளை நினைத்தபோ தெல்லாம்
உவட்டினேன்; இதுவுநீ யறிவாய்.
தடித்த உள்ளத்தோடு நகைப்பதைத் தாங்கேன்;
அயலார் பகைகளுக் கஞ்சி பதுங்கினேன்.
கசப்புற வாழ்வைப் பார்த்திடிற் கேட்கிற்
சஞ்சல முறுமெனப் பயந்தே
நகர்ப்புறத் திருக்குந் தோட்டங்க டோறும்
நண்ணியும் பிறவிடந் தலைத்தும்,
பகற்பொழு தெல்லா நாடொறுங் கழித்தேன்
பகலன்றி யிரவுமப் படியே
மிகப்பல விடத்துந் திரிந்தன னடியேன்
விளம்பலேன்? நீயறிந் ததுவே !
சண்டைக் கூக்குரல் கேட்டுக் கலங்கினேன். நண்பர் அணிவித்த சரிகைத் துகிலைப் பயந்தேன். கைவீசி நடப்பதற் கஞ்சினேன். கைகளைக் கட்டியே நடந்தேன். உடம்பை வெள்ளை யாடையால் மூடினேன். பிறர் கோலமும் நடையும் நான் ஊன்றிப் பார்த்ததே யில்லை. நகர மடவார் நயந்துங் கலந்திலேன். எளியரை வலியர் அடிப்பதை யேங்கினேன். களியரைக் கண்டு கடலள வஞ்சினேன். களவெனக் கேட்டுக் கனலென நொந்தேன். உரத்துப் பேசின் உள்ள நடுங்கினேன். ஐயோ வென்று வெதும்புவோர்க் கிரங்கினேன். கண்ணீர் கண்டு கண்ணீர் உகுத்தேன்.
தேட்டிலே மிகுந்த சென்னையி லிருந்தாற்
சிலுகுறு மென்றுளம் பயந்தே
நாட்டிலே, சிறிய வூர்ப்புறங் களிலே,
நண்ணினேன்; ஊர்ப்புற மடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்
களத்திலே திரிந்துற்ற இளைப்பை
யேட்டிலே யெழுத முடியுமோ? இவைகள்
எந்தைநீ யறிந்தது தானே !
துன்பங்கண்டு துன்பாற் கரைந்தேன். கன்றுகள் கதறக் கருத்திற் கலங்கினேன். அதிர் நடை கண்டு நெஞ்சம் அதிர்ந்தேன். தீ மொழி கேட்டுத் தீயென நொந்தேன். வாடிய பயிர் கண்டு வாடித் தவித்தேன். ஐயம் புகுந்தும் அரும்பசியால் தவிப்போரைக் கண்டு மெலிந்தேன். கடையரை வெருவினேன். கெடுநிலையாளர் கேட்டை அஞ்சினேன். கால் மேற் கால் போட்டுக் கட்டிலி லிருக்கவும் அஞ்சினேன். பாட்டயல் கேட்கப் பாடவுங் கூசினேன். கொலை புலை நெறியைக் குணுக்கென் றஞ்சினேன். எல்லாம் நீ அறிவாய். என்னுட் கனிந்த களைகணே! என் சுதந்தரம் எள்ளளவில்லேன்; அறிவுறு நாள் முதல் உன்னை மறந்திலேன். பொய்யுல காசை சிறிது மில்லேன். சிறு பருவத்தே நின்சார்புற்றேன்; பிறிதெலாம் விடுத்தேன். ஞானத் திருச்சபையிலே சத்திகள் சத்தர்கள் தழைக்கச் செங்கோல் நடாத்தும் தனி முதலே! பித்தியலுடையேன் எனினும் நின் பிள்ளையன்றோ? நான் வாடுதல் அழகோ ! இனிப் பிறவேன், இறவேன்; என்னை விட்டகலேல் !



