அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

3. மாசற வாழ்ந்தார்

இத்திருவருட் சேய் அவதரித்தபோதே உலகன்னை உளஞ் சிலிர்த்துப் புதிய முறுவல் பூத்தாள். இச்சேயின் பிறப்பும் அற்புதம் சிதம்பரத்திற்கருகே யுள்ள மருதூர் செல்வோம்.

அங்கே இராமைய பிள்ளை கல்விச்செல்வர்; கருணைச் செல்வர்; சிவனை மறவாத் திருவருட் செல்வர்; நல்லறம் போற்றும் இல்லறச்செல்வர்; அவர் சிதம்பர நினைப்புடன் மருதூரில் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தார். அவர் ஐந்து மனைவியரை இழந்து, சின்னம்மையை ஆறாவது மனைவியாக மணந்தார். பொன்னேரிச் சின்னம்மை, கணவனுக்கேற்ற துணைவி. இருவரும் அன்பும் அறமும் அரனடி நேயமும் தூயவொழுக்கமும் தொண்டர் பணியும் பூண்டு, வந்ததைக் கொண்டு சிந்தையிலுவந்து, மனையறந் தாங்கி மாசற வாழ்ந்து வந்தார்கள். கருணீக குலதிலகரான இராமைய பிள்ளை கிராமக்கணக்கர்; தமிழாசிரியர். இரண்டு தொழில்களிலும் கிடைத்த வருவாயைக் கொண்டு அவர் எளிய வாழ்வு வாழ்ந்துவந்தார். சின்னம்மை நல்ல குணமணி ; நாணுடுத்த நல்லாள்; கற்பும், பொற்பும், கடவுளன்பும், கணவன் பணியில் கருத்தும் கவனமும், அடியார் நேயமும் கொண்ட திருமதி; உயிர்க்கருணை, அடக்கம், இன்சொல், இவை கமழும் நிறைமலர்க் கொம்பன்னாள்.

இத்தகைய நற்குணச் செல்வியுடன் இராமைய பிள்ளை காத்த மங்கல மனையறத்திற்கு இன்பக்கனிகளாக நான்கு செல்வர் தோன்றினர்: சபாபதி, பரசுராமன் என்னும் புதல்வர்; சுந்தரம்மாள், உண்ணா முலை யென்னும் புதல்வியர். இவர் மனைவாழ்வு தழைத்து வருநாளில் ஒரு சம்பவம் நடந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !