அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

63. உடலைப் பேணும் முறை

நம்மை நஷ்டஞ் செய்யும் ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இவற்றில் கவனமாயிருத்தல் வேண்டும். இம்மானிட உடலே முத்திக்கேற்றதனால் இவற்றின்பால் கவனமாயிருக்க வேண்டும். இந்நியமத்தைப் போற்றுக.

சூரியோதயத்திற்கு 5 நாழிகைக்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, நீறு பூசிச் சிறிது தியானித்தல். பின்பு சற்றே மெளனமாக வெளியிலுலவி மலங் கழித்தல். மலங் கழிக்கும்போது வலக் கையால் இடப்பக்கம் அடிவயிற்றைப் பிடித்தல். சலங் கழிக்கையில் இடக் கையால் வலப் பக்கம் அடி வயிற்றைப் பிடித் திருத்தல். மலம் தடைப்பட்டால் இடப்பக்கம் சற்றே படுத்துப் பிராணவாயுவை வலத்தே வரும்படி செய்க.

பிறகு செவி, கண், மூக்கு, வாய், தொப்புளிலுள்ள அழுக்கு களை வெந்நீரால் துடைத்தல்; அதன் பின் வேலங்குச்சி, ஆலம் விழுது, இவை கொண்டு பல் விளக்குதல்; பின் கரிசிலாங்கண்ணித் தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும்படி பல்லில் தேய்த்து வாய் அலம்பின பின், பொற்றலைக் கையாந்தகரையிலை அல்லது கரிசிலாங்கண்ணியிலை ஒரு பங்கு, தூதுளையிலை, முசுமுசுக்கை யிலை கால் பங்கு, சீரகம் கால் பங்கு இவற்றைச் சூரணித்து—அதில் ஒரு வராகன் எடை நன்னீர் சேர்த்து, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் கலந்து, நீர் வற்றக் காய்ச்சி நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும். காலை வேறு உணவு கூடாது. வில்வம், கடுக்காய், அறுகம்வேர்—இவையும் உண்ணலாம்.

இளம் வெந்நீரில் குளித்துச் சிவ சிந்தனையுடன் சிறிதிருந்து, பசி கண்டால் உணவு தரல் வேண்டும். முன் புசித்தது செரித்த பின்பே அற்றது போற்றித் தராசுமுனை போல அளவறிந்து உண்ண வேண்டும். உணவில் உப்பு குறைவாகவே சேர்த்தல் வேண்டும். பச்சரிசி, பசும்பால், பசு நெய், முருங்கை, கத்திரி, புடல், கொத்தவரைக்காய், பேயன் வாழை, புளியாரை, முள்ளி, தூதுளை, பொன்னாங்காணி, கீரை, மிளகு, ஓமம், வெந்தயம், துவரம்பருப்பு முதலியவை உணவுப் பொருளாகக் கொள்ளலாம். பெருங்காயம், வெங்காயம், வெள்ளைப் பூண்டு இவற்றைத் தள்ளுக! உப்பு புளி மிளகாய் முதலியவை மிகச் சிறிதளவே சேர்க்க வேண்டும். மதியம் உண்டபின் இளஞ் சூடுள்ள வெந்நீரைத் தாகத்திற்குக் குடித்தல் வேண்டும். உணவு பாதி, உறக்கம் அரைக்கால், மைதுனம் வீசம், பயம் பூச்சியம் ஆகப் பெறுதல் வேண்டும்.

பகல் உண்டவுடன் உறக்கம் வராது சற்று இளைப்பாறுக! பிறகு மதியந் தொடங்கி 25 நாழிகை மட்டும் மெல்ல சாத்வீக விவகாரத்திருத்தல், மெல்லெனப் பேசல், 5 நாழிகை ஓரிடத்திருந்து கடவுளை நினைத்தல், சாயங்காலம் அசையாதிருந்து தியானித்தல்; இரவில் பகல் உணவிற்கும் பாதி அளவே உண்ணல்.

இரவில் மனதை அடக்கித் தியானித்தல், இடப்புறம் படுத்தல்; ஒரு நாழிகை மனத்தைத் தேக சம்பந்தத்தில் வையாது, பின் அறிவு விகற்பியாமல், சூடு தோன்றாமல், இடப்புறச் சாய்வாக புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலத்தில் சுக்கிலம் வெளி யேறாமல் (பிராண வாயுவை உள்ளேயும் வாங்காது வெளியேயும் விடாது நடுவில் உலாவச் செய்வதே இதற்கு உபாயம்) ஒரு முறை தேக சம்பந்தம் செய்து உடனே தேக சுத்தியுடன் சிவத் தியானத் திருக்கவேண்டும். 4 தினத்திற் கொருதரம் செய்தல் அதமம், 8 தினத்திற்கு ஒரு முறை மத்திமம், 15 தினத்திற்கு ஒரு தரம் உத்தமம். அதன் மேற்படின் சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும். துன்மார்க்கப் பழக்கம் செய்யக்கூடாது. இரவில் சொப்பனம் வராது மெதுவாகவே நித்திரை செய்து விழித்துக்கொள்ள வேண்டும்.

அச்சம் கூடாது. எப்போதும் மகிழ்வுடன் இருக்க வேண்டும். கடுஞ்சொல், உரத்துப் பேசல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டை இவை கூடாது. சிவ சிந்தனையுடனேயே எந்த வேலையும் செய்யவேண்டும். புருவ மத்தியில் நமது ஆன்ம ஞானமென்ற கற்பூரத்தில் கடவுள் அருள்விளக்கு எரிவதாகப் பாவித்துப் பழகிக் கடவுளிடம் உண்மையன்பும் உயிரிரக்கமும் கொண்டு ஓங்கார பஞ்சாட்சரி அல்லது சிவ பஞ்சாட்சரத்தை உச்சரிக்க வேண்டும். சிவ என்பது அனாதியாய் மலமில்லாத சர்வ வல்லமையுள்ள பொருள்.

இது தவிர, ஆறு மாதத்திற் கொருமுறை வெள்ளைக்காக் காட்டான் முதலியவற்றால் விரேசனம் வாங்கிக் கொள்ளல், பருக்காரை முதலியவற்றால் நாலு மாதத்திற்கு ஒரு தரம் வமனம் செய்தல், முள்ளி முதலியவற்றால் வருஷத்திற்கு ஒரு தரம் நசியஞ் செய்தல், நாலு நாளைக்கு ஒருதரம் அத்தி முதலியவற்றால் செய்த மையைக் கண்ணுக்கு அஞ்சனந் தீட்டல், நாலு நாள் அல்லது வாரம் ஒரு முறை முலைப்பால் பொன்னாங்காணி கூட்டித் தைலம் இட்டுக் கொள்ளல் முதலியன குறிக்கத் தக்கன.

உடம்புவரு வகையறியீர் உயிர்வகையை யறியீர்;
உடல்பழுக்க வுண்டுநிதம் உறங்குதற்கே யறிவீர்;

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர்; மனத்தை
வசப்படுத்தீர்;
வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்; இடம்பெறுபொய் வாழ்க்கையிலே யின்பதுன்பமடுத்தே யெண்ணியெண்ணி யிளைக்கின்றீர் ஏழையுல கீரே! நடம்புரியென் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !