அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

29. இரக்கம் ! இரக்கம் !

“எனையாண்ட கருணையாரமுதே! என்னுயிர்க்குயிரே! சிற்றம்பலக் கனியே! திருச்செவி சாய்ப்பாயாக!

அன்பர் அறிவில் ஓங்குந் தலைவனே! என் அண்மையர், துணைவர், உற்றார், உறவினர் முகத்தில் இளைப்பைக் கண்ட போதெல்லாம் கலங்கினேன்; அவர் பசியாலும் பிணியாலும் வெம்பி வெதும்பக் கண்டு விதிர்விதித்தேன். நண்பர்கள் அவரவர் குறைகளை என்னிடங் கூறும்போதெல்லாம் உள்ள முடைந்தேன். செல்வர், வறியர், ஆண் பெண் அனைவரும் இவ்வுலகில் பிணியால் வருந்துவது கண்டு தளர்ந்தேன். மக்கள் இறந்ததைக் கேட்டுக் குலைந்தேன். அழுகுரல் கேட்டுப் பகீரென நடுங்கினேன். என் தாய் தந்தை, நேயர், துணைவர் பிரிவை நினைத்து நெஞ்சுடைந்தேன். நல்லோ ருடற்பிரிவு கேட்டு நடுங்கினேன். கொலைஞரைக் கண்டு கொள்ளிபோற் கொதித்தேன். பிணப்பறை கேட்டுப் பெரிதுங் கலங்கினேன். உலகரசாளுவோர் ஒருவரை ஒருவர் வாள் கொண்டொறுப்பதை வழுத்தினுந் தளர்வேன். நண்பர் வீட்டு நடப்புகட் குடைந்தேன். பசித்தவர் பட்டினி என்றாற் பரிந்தேன். பல்லி பகர்வது பிறர் துயரோ வெனக் கலங்குவேன்; புட்களும் வருந்திக் கூவும்போது அஞ்சினேன்; நச்சுயிர்களைக் கண்டு நடுங்கினேன். இமையும் புயமும் துடிக்கின் பிறர் துயர் காட்டத் துடித்தவோ என்று கலங்குவேன். மங்கையர் வலிக்கத் தப்பி மறைந்தேன். மையலாற் பிறர்படுந் துயரில் மயங்கினேன். சுகவுண வஞ்சினேன். அன்பர் விருந்திற் கழைத்தபோது ஒளிப்பு வார்த்தை உரைத்து அயலொளிந்தேன். இன்புறு முணவு துன்புறு மென்று வெறுவயிற்றோ டிருந்தேன்! பெற்ற தாய், நேயர், உற்றவர் வாட்டம் கண்டு அஞ்சினேன்; சோம்பலிற் பதைத்தேன்; துயில் கண்டு அஞ்சினேன்; “சிவ சிவ, தூக்கந் தொலைப்பா” யென்றேன். கனவிற் கலங்கினேன். கல்வி பயிலுங்கால் சிறுவரை அடிக்கின் வருந்தினேன்.”

[புராணிகர் சுந்தரம் பிள்ளை பாடஞ் சொல்லிக் கொடுக்கையில் சிறுவரை அடிப்பதுண்டு. வள்ளலார் இப்பாட் டெழுதி யனுப்பி அவரை அத்தவற்றினின்றுந் தப்புவித்தார்]

படிப்பதுநன் றெனத்தெரிந்த பாங்குடையாய்,
மன்றுள் வெளிப் பரமன் அன்பே
தடிப்பதுநன் றெனத் தெரிந்த சதிருடையாய்,
அறநவின்ற தவத்தாய், வீணில்
துடிப்பதிலாத் தூயமனச் சுந்தரப்பேர்
உடையாயென் தோழ கேள்நீ
அடிப்பதுமச் சிறுவர்களை அடிப்பதுநன்
றலவென்மேல் ஆணை யாணை !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !