
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
9. மிஞ்சி விடுவான்
இவ்வாறு முருகனை வழுத்தி வழிபட்டு வந்த நமது அன்புப் பெருமான் உட்கனிவை யாரே காண்பார்? கற்குமுன் கவி பொழியும் இக்காளமேகத்தைக் கண்டார் சபாபதி பண்டிதர்; “குட்டுதற்குப் பிள்ளைப் பாண்டியனில்லை; குறடு கொண்டு காதை வெட்டுதற்கு வில்லியில்லை; இந்த வயதில் கற்குமுன் கவி பாடுவதாவது!” என்று கனன்றார்; எம்பிரானின் இனிய அருள் வாக்கினின் றரும்பும் தெய்வ மலர்களை அவர் கண்ணாரக் கண்டா ரெனினும், அதன் நறுமணத்தை அன்புற நுகராது…. “எடுக்குமுன் இப்படிக் கவி தொடுப்போன், மேலும் இலக்கண இலக்கியம் தேர்ந்தால் நம்மை மிஞ்சிவிடுவான்” என்று பாடஞ் சொல்வதையே நிறுத்திவிட்டார். பண்டித னறிவனோ பழுத்தநல் லருளை! அவர் பாடம் நம் இயற்கைப் புலவருக்கு வேண்டியதுமில்லை; அதைக் கற்காததால் நம் கடவுட் பிள்ளையின் அருளூற்றுத் தடைப்படப் போவதுமில்லை. தேனும் பாலும் அமுதுங் கனிரசமுந் தெவிட்ட முருகன் நமது திருமகனுள்ளிருந்து அருட்கவி யமுதூற்றைப் பெருக்குகின்றான்! ஞானச்சுடர் தூண்டுகின்றான்! அதுவே கல்வி, சாகாக் கலை; இவ்வருளின்ப விருந்தை யுண்டவனுக்கு ஏட்டுக் கல்வி எம்மாத்திரம்!



