
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
21. ஒன்று கொடுத்தனை
திருவருட் சோதியார், தாம் பெற்ற குருவருட் பேற்றைப் பின்னும் அருளிச் செய்கிறார்:-
“திருவுருக் கொண்டு சிறியேன் முன் எழுந்தருளி, திருநீற்றுப் பையவிழ்த்து நீறு தந்தனை; அம்பலத்தே நடம்புரியும் என் குருமணியே! என் வடிவந்தழைப்ப ஒரு பொன்வடிவந் தரித்தே, என்முன் நடந்து கருணை துளும்ப என்னை நோக்கி யிளநகை செய்தருளித் திருநீறளித்தனை; என் கையில் ஒரு அருள் மணப்பூ தந்தனை.”
இன்னுந் தெளிவாக அருட்பிரகாச மாலையில் தமதனுபவத்தை அருளுகிறார்:-
“பொது நடஞ்செய் யரசே! அன்றொரு நாள் இரவில் அடியேன் உற்றவிடந் தேடிவந்து, கதவு திறப்பித்து, என்னை வரவழைத்து, நான் மறுத்தும், ‘மகனே வருந்தாதே; இதனை வாங்கிக்கொள்!’ என்று என் கையில் ஒன்று கொடுத்தனை. அன்று அதனை அறியாது உழன்றேன். இன்று என்னகத்தே புகுந்தருளி அதனைத் தெரிவித்து இன்புறச் செய்தனை. அன்பர் மனக் கோயிலில் அமர்ந்தருளும் மலரடி வருந்த நடந்து, என் மனைக் கதவு திறப்பித்து, ஒன்றைக் கையிலீந்து, “மகனே நீ என் தொழும்பன், நீ பண்பொடு வாழ்க, மகிழ்ந்துறைக, மயக்கமுறேல், ஒன்றும் அஞ்சேல்!” என்று போதாந்தத்தில் விளங்கும் திருமேனி காட்டித் தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறுந்தேனும் நெய்யுங் கலந்ததெனத் திருவார்த்தை அருளினை.
பிரணவத்தின் அடிமுடியி னடுவினுநின் றோங்கும்
பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே,
கரணமுற்று நடந்தடியே னிருக்குமிடந் தேடிக்
கதவுதிறப் பித்தருளிக் கடையேனை யழைத்துச்
சரணமுற்று வருந்தியவென் மகனேயிங் கிதனைத்
தாங்குகவென் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
மரணமற்று வாழ்கவெனத் திருவார்த்தை யளித்தாய்
மன்றுடையாய் நின்னருளின் வண்மையெவர்க் குளதே !
வேதாந்தம் சித்தாந்தம் இரண்டும் விளங்க, ஒருமையிலே இருமையென வுருக்காட்டி, நாதவிந்து நிலைக்கரசாய், அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்தித் தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும் சிற்போதத் திருமணிமன்றிலே எம்மதத்தில் எவ்வெவர்க்கும் இசைந்த அனுபவமே! உள்ளுருகுந் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் செழுமணியே! என்னுருவம் எனக் குணர்த்தினை; நான் தனித்த இடத்துத் தோன்றுந் துணையே, தனியா விடத்துத் தோன்றாத் துணையே! அருள் விளங்கும் உள்ளத்தில் அதுவாய் விளங்கிப் பிரயோக அனுபவத்தே அகம்புறந் தோன்றாத பரஞ்சோதியே! என்னறிவை யுண்டு என்னுடன் கூடி, என்னின்ப மெனக் கருளி, யென்னையுந் தானாக்கித் தன்னறிவாய் விளங்கினை.’
இதுவே வள்ளலார் எளிதிற் பெற்ற பேறு. தம்முள்ளே அருட்கதவு திறந்து, இதய மணி மண்டபத்தில் சோதி நடம்புரியும் சற்குரு மணியால் அருளப்பெற்று என்றுந் தாம் அதுவாயிருக்கும் தன்மயச் சின்மய வுணர்வான சாகாக் கலையைப் பெற்ற வள்ளலார் வாழ்வு அன்றுமுதல் ஒரு பெரிய மாறுதலடைந்தது. தம்மை முற்றும் உள்ளத்திலுள்ள அருளாசானுக்கே அவர் அர்ப்பணஞ் செய்தார்.
என்னுயிரும் என்னுடலும் என்பொருளும் யானே
இசைந்துகொடுத் திடவாங்கி யிட்டதன்பின் மகிழ்ந்தே,
தன்னுயிருந் தன்னுடலுந் தன்பொருளு மெனக்கே
தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே!
மன்னுயிருக் குயிராகி யின்பமுமாய் நிறைந்த
மணியேயென் கண்ணேயென் வாழ்முதலே மருந்தே!
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யுமணிந் தருள்வோயென் பொய்யுமணிந் தருளே!
என்ற பாட்டில் தம்மைக் கடவுளுணர்வில் இரண்டறக் கலப்பித்துத் தம்மை அவனுள் வைத்து அவனைத் தம்முள் வைத்து, அவனே தாமாக மாறும் நிலை தெளிவாகிறது. இத் தெய்விக மாறுதலே (Transformation) சாகாவாழ்வு. பூரணப் பொன்னொளிர் மாறுதலுக்கு அருட்பெருஞ்சோதி உதயமாவதே (Spiritual Light) இனி அடுத்த அனுபவம். அதனிடையே நிகழ்ந்த கதையைச் சுருக்கிக் கூறுவாம்.



