அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

61. ஆண்டவனிடமே நாட்டம்

ஆன்ம விசாரத்தால் பச்சைத் திரையாகிய இராகாதிகளை விலக்குங்கள்! ஆண்டவனை வழுத்தி இறைஞ்சி நினைத்தலால் பிறக்கும் அன்புக்கனல் ஆணவத்திரை யகற்றி அருளொளி துலக்கும். மலை காடுகளில் தவஞ் செய்வதினும் இது நலம். விசாரம் என்பது துக்க நிவர்த்தி. வேதாகம புராண இதிகாசம் எதிலும் இலட்சியம் வைக்க வேண்டா! சைவம் வைணவம் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதத்தும் நாட்டம் வேண்டா! ஆண்டவனிடமே நாட்ட மூன்றிச் செயலனைத்தும் அருளொளியாற் காண்க ! கருணையுஞ் சிவமுமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக! வேறு சிறு நெறி வேண்டா. ஒருமை யிருந்தால் அருள் வரும். என்னைப்போல நீங்களும் ஒருமையுடன் இருங்கள்! சமயவாதிகளை நம்ப வேண்டா !

தெய்வத்தைத் தெரிந்துகொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்! ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததனாலல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப் பட்டுக் கொண்டே யிருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். அனுபவித்தாலல்லாது தெய்வத்திடம் பிரிய மிருக்காது. பிரபஞ்ச போகத்தின்கண் அலட்சியம் தோன்றினால் நிராசை யுண்டாகும். நாம் அடையவேண்டியது ஆன்மலாபமான சிவானுபவமே. சுவர்க்க நரக விசாரம் வேண்டா. ‘அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை!” யெனும் மந்திரம் ஆண்டவன் அளித்தது. அதை அருணெறி பற்றிச் சாதனம் செய்க !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !