
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
18. திருவொற்றியூர் வழிபாடு
இதன் பின் வள்ளலார் தமது அருட்பா வெள்ளத்தால் ஒற்றியூர்ப் பெருமானுக்கு உள்ளங்குளிர இன்ப நீராட்டுவதைக் காண்கிறோம். ஒற்றியூரை யெண்ணுங்கால் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்தடிகள் முதலிய பெரியோர் தெய்விகக் காட்சி நம்முன் விளங்குகின்றது. தேனினும் இனிய பதிகங்களைச் செவி மடுக்கின்றது. ஏலேலசிங்கனுக்கு மணிகளளித்த தியாக மூர்த்தியைத் தம் கண்மணி போலப் போற்றி, நம் பொன்மணி பாவலர் பாடிய பதிகங்கள் பலப்பல. மனிதனின் இளம் பருவத்தைப் பற்றி அலைக்கும் மனப் பிணிகள் பல; அப்பிணிகளைத் தீர்த்து அடியார் கூட்டத்தில் தம்மைச் சேர்க்க அல்லும் பகலும் நம் பெருமான் திருப்பாமலர்களை அள்ளித் தூவினார். அம்மலர் மணச் சோலையிற் சிறிது உலாவுவாம்.
இங்கிதமாலை, எழுத்தறியும் பெருமான் மாலை முதலிய மாலைகளும் எண்ணிறந்த விண்ணப்பங்களும், முறையீடுகளும், இரங்கற் பாக்களும், பதிகங்களும், புலம்பல்களும், கிளவிகளும், மலை மலையாகக் குவிந்து கிடக்கும் அப்பாமலர்க் குவியலில் எத்தனைதான் இச்சிறு நூற் செல்வி தன் கொண்டையில் அணிய முடியும்! அவ்வாடாத் தெய்வ நாண்மலர்க் கும்பலுக் கருகே சிறிதுலாவி அதன் நறுமணத்தை நுகருவதே இவள் செய்யத் தக்கது!
அழுதபிள் ளைக்கே பாலுண வளிப்பாள்
அன்னை யென்பார்கள்; அழவலி யில்லாக்
கொழுது நேர்சிறு குழவிக்குங் கொடுப்பாள்
குற்ற மன்றது மற்றவள் செயலே !
தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே
துட்ட னேனுக்குஞ் சூழ்ந்தருள் செயலாஞ்
செழுது மாதவி மலர்திசை மணக்கத்
திகழு மொற்றியூர்த் தியாகமா மணியே !
தியாகப் பெருமானே!வானை நோக்கி வழி நடப்பான் போல ஊனை நோக்கி உன்னருள் வழியிடை நடந்தேன்; வாயிலாதவன் வழக்குரைப்பது போல நின்னருள் பெற விழைந்தேன்; வித்தின்றி விளைப்பவன் போல நின்னன்புப் பித்தின்றி முத்தி விழைந்தேன்; கலமிலாது கடல் கடப்பவன் போல் நின்னடிக் கமலத்தை வழுத்தாது அருள்பெற விழைந்தேன்; பொங்கும் வெள்ளத்திற் பொன் புதைப்பவன்போல், எனது புலை நெஞ்சை உன் பூவடி சேர்த்தேன்; ஓட நினைத்து உறங்குவான் போல உன்னருட் கடலில் ஆட நினைத்து, மங்கையர் மையலில் அழுந்துகின்றேன்; முதலின்றி ஊதியம் பெறுவான் போல, உன்பத மேத்தாது அருள் பெற விழைந்தேன்; கல்லை யுந்தி நதி கடப்பவன் போலக் காம முந்திய நெஞ்சத்தால் பவக்கடல் கடக்க நினைந்தேன்; நெய்யினால் நெருப்பவிப்பவன் போலத் துன்பப் பொய்யினால் பாவம் போக்கிட நினைத்தேன்; நீர் சொரிந்து விளக்கெரிப்பது போல, நின்நேசம் வேண்டிப் பார் சொரியும் பவநெறி செல்கின்றேன். இப்புலையனுக்கும் உன்னருள் கூடுமோ! இப் பாவியேனைக் கூவியருளாய்! கரும்பின் கட்டியே, தேனே! கன்மக் குரங்கனேன், எட்டி யேன் வாதமே புரிவேன்; கொடும் புலியனைய வஞ்ச மனத்தினேன்; மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலரடி வழுத்த எண்ணிலேன். என்னை என் செய்தால் தீரும்? பண்ணிசையே, பாலிற் சுவையே! நாணமிலா நாயினேன், வீணனென்று நீயுங் கைவிடில் என் செய்வேன்? உன்னை நம்பினேன்; நாயினேன் பிழை குறியேல்! காமனைக் காய்ந்தோய்! என் குறை தவிர்க்கிலையோ? சிந்தை நொந்து தியங்குகின்ற நாயேனை, வினை தொலைத்து உன்னடிக் காளாக்கலாகாதோ? மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தேன்; மின்னார் இச்சையால் வெம்புகின்றேன்; காமப்பித்து, ஆணவம், பொய், அழுக்காறு, சினம், வஞ்சம், கொலை முதலாம் பாவங்களுக்கு ஆளாக்கித் துயரக் கடலுள் வீழ்த்துங் கொடிய மனத்தின் துன்பச் சுமையை யெடுத் தருளாயோ! இப்பொய்யடியேன் நெஞ்சின் ஓட்டகலச் செய்து தூக்கமிலா ஆனந்தத் தூக்கமருள்வாய்! வஞ்சமிலார் நெஞ்சகத்தில் மருவும் மாமணியே! நினை நினையாது, மாதிற்கும் வாதிற்கும் நாளைக் கழிக்கின்றேன்.
பெருங்கருணைக் கடலேயென் குருவே முக்கட்
பெருமானே நினைப்புகழேன் பேயே னந்தோ,
கருங்கன்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
கழிக்கின்றேன்; பயனறியாக் கடையனேனை
ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
உருட்டுகினும், உயிர் நடுங்க வுள்ள மேங்க
இருங்கழுவி லேற்றுகினு மன்றி யின்னும்
என்செயினும் போதாதே யெந்தா யெந்தாய் !
பேதை நெஞ்சினேன் செய்பிழையெல்லாம் பேசினால் பெரும் பிணக்கு! இப்புலைய நெஞ்சினாற் பொருந்திடும் அல்லலுக் கெல்லை யில்லை. ஆயினும் உனது கோயிலை அடுத்தேன்; என் நெஞ்சக் கருங்கல்லைக் கரைத்துக் கருணையீதல் உன் கடன்!
வெறி பிடிக்கினு மகன்றனைப் பெற்றோர்
விடுத்திடார்; அந்த வெறியது தீரும்
நெறி பிடித்துநின் றாய்வர்; என்னரசே !
நீயும் அப்படி நீசனேன் றனக்குப்
பொறி பிடித்தநற் போதக மருளிப்
புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்.
செறி பிடித்தவான் பொழிலொற்றி யமுதே
தில்லை யோங்கிய சிவானந்தத் தேனே !
காமப் புலையா! என்னை நரகக் குழியில் அழுத்தி மடிக்க வஞ்சனை செய்கிறாய்; கபடப் பாவியே! காமவேட்டுவனே ! கோபக் கொலைஞனே ! தயையற்ற லோபமே! மூடரிற் சிறந்த மோகமே! மதமத்தனே ! ஆணவப் பயலே! அகங்காரக் கடையனே! நீவிர் தூர நின்மின்! எதிர்நின்றால் ஒற்றியூர்ச் சிவனருளால் உம்மை வெட்டுவேன்! வகையிலார்க் கருளும் மாணிக்க மணியே! நின்னருள் பெறாத என் சிறுமை யெண்ணித் திகைக்கின்றேன். வினைப்புல வேடர் என்னை வெல்லுகின்றனர்; மெலிகின்றேன்; வீண் காலங் கழிக்கின்றேன். சிறியருட் சிறியேன் என்செய்வேன்? தத்து மத்திடைத் தயிரெனத் தளர்ந்தேன்; உன்னருளின்றி உய்திற மில்லை. என்னெஞ்சுளிருந்தே என்றுயர் அறிந்திலையோ! மாயை பற்றி நோயும் மூப்புங்கொண்டு உலகம் படும்பாட்டை நோக்கி, என்னுள்ளம் உருகுகின்றது. கோடி கோடி குணப் பழுதுடையேன்; என்றும் நின் கருணை யின்றேல் அடியவனாவ தெப்படி?
எந்தையே யென்பவர்தம் இன்னமுதே யென்னுரிமைத்
தந்தையே தாயே தமரேயென் சற்குருவே சிந்தையே
யோங்குந் திரு வொற்றி யையாவென் நிந்தையே
நீங்க நிழலளித்தா லாகாதோ !
இந்த வஞ்ச நெஞ்சினை வசப்படுத்த நின்னருள் வேண்டும். நின்னருட் சுகமே உண்மை என்று உணர்த்தியும் இப்பெண்மை நெஞ்சகம் வெண்மை கொண்டு உலகப்பித்திலே தொத்தி நிற்கின்றது. தீது செய்தேன், செய்கிறேன், செய்வேன், எனினும் இறைவனே என்னை ஆள்வது உன்னியல் பன்றோ? பொல்லேன், நல்லாரைக் காண நாணுகின்றேன். எனினும் எல்லாம் வல்லாய், எல்லாம் அறிந்த உனக்கு இன்னும் சொல்வதென்னே!” என்று குறையிரந்து முறையிடுவார் ஒருகால்.
“உன்னருட் டிருப்பெயரை யான் மறவேன். திக்குமாறினும், எழுகடல் புவி மீது செல்லினும், விண்ணொளிக்கணங்கள் வீழினும், மறையின்றி உலகில் உணவு வறண்டாலும், புவியேழும் மாறினும், அண்டம் வீழினும், பெற்ற தாயை மகன் மறந்தாலும், பிள்ளையைத் தாய் மறந்தாலும் உடலை உயிர் மறந்தாலும், உயிரை உடல் மறந்தாலும், கற்ற நெஞ்சங் கலை மறந்தாலும், கண்ணினின்று இமைப்பு மறந்தாலும், நமச்சிவாயனே! நின்னை மறவேன். கடல் அலையை மறக்கினும், உலகோர் பசி மறந்தாலும், புதைத்தவர் பொன் மறந்தாலும், நடப்பவர் வழி மறந்தாலும், வறுமை வரினும், வாழ்வு வரினும், பன்னாளிருப்பினும், இன்றே இறக்கினும், வான்கதி நேரினும், நரகம் வரினும், காமன் கணை வரினும், கால பாசம் வரினும், பூவின் மன்னவன் சீறினும் பொருளல்ல; நின்னை மறவேன். ஓடுங் கதிரவன் பின்னே நாட்கள் ஓடுகின்றன. எனினும், மார்க்கண்டேயர் மாண்பறிந்து வருந்துத லொழிந்தேன். என்னைப் பொறுக்கினும், வெறுக்கினும், ஒறுக்கினும், மறுக்கினும் நீயே துணை” என்று வீரவுறுதியுடன் சிவபிரான் மலரடி பற்றுவார்.
சழக்கி ருந்ததென் னிடத்திலா யினுநீர்
தந்தை யாதலிற் சார்ந்தநன் னெறியிற்
பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
பண்பன் றோ? எனைப் பரிந் திலீ ரானால்,
வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
வகுத்துக் கூறுதன் மரபுமற் றன்றால்,
புழைக்கை மாவுரி யீரொற்றி யுடையீர்
பொய்ய னென்னில்யான் போம்வழி யெதுவோ?
மழையின் வண்மையை மாற்றித் தடுப்பாருண்டோ? பிறவிக் கண்ணில்லான் கைக்கோலைப் பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ? உம்மேல் வைத்த அன்பைச் சஞ்சல வாழ்வில் ஆழ்த்துதல் அழகோ? ஒழுக்கமில்லேனெனினும் நினது சமூகம் நிற்கின் புண்ணியக் கனி பழுக்கும் குணதரு ஆவேன். ஆண்டவ! நின் கருணைக் கடலில் ஒரு சிறு திவலை என்மேல் தெறித்தால் உய்வேன். என் அப்பனே! தெரியாமையாற் செய்த பிழைகளைப் போக்கி அருளிலையேல், ‘பேரிசை கொண்ட பிள்ளாய்! அரன் உனக்குச் சாதித்த தென்ன?’ என்று தாயும் பரிகாசம் செய்வள். அருட் கற்பகமே! என் நோன்பு வீணென்று உலகோர் கைதட்டி வெண்ணகை செய்வர். மனது என் வசமாக, நினது வசம் நானாக வந்து அருள் செய்வாய்! ஊன்முகப் பார்வை விட்டு, உள் முகப் பார்வை பெற்றோர் பெறுஞ் செல்வமே! மையலென்னும் முரட்டுப் பேயாற் பிடியுண்டு அடியுண்ட பிஞ்சுபோன்றேன். நான்றான் வஞ்சக நெஞ்சன்; நீயுமா? சுந்தரருக்கு ஓலை காட்டியது போல் காட்டுதல் வேண்டா; தொண்டன் என்று ஏற்றாற் போதும். ஆயிரம் பணி புரிவேன். அணுவும் கூலி வேண்டேன்; கொடுக்கினுங் கொள்ளேன். அருளைத் தந்து அடிமை கொள்வீர்! நம்புமென்னை! வெம்புறச் செயினும், உம் சித்த மல்லது செய்வ தொன்றில்லை. தியாகராஜன் எனப் பெயரெடுத்தீர்; உம்மை அடைந்தால் ஒரு வார்த்தையுஞ் சொல்லீர்! இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீரானால் யாதுக்கைய நீர் அப்பெயரெடுத்தீர்?
வெள்ளி மாமலை வீடென வுடையீர்
விளங்கும் பொன்மலை வில்லெனக் கொண்டீர்
வள்ளி யீரென நும்மைவந் தடைந்தால்,
வாய்தி றந்தொரு வார்த்தையுஞ் சொல்லீர்
எள்ளி லெண்ணெய்போல் எங்கணு நின்றீர்
ஏழை யேன்குறை யேனறி யீரோ?
ஒள்ளி யீருமை யன்றியொன் றறியேன்
ஓங்கு சீரொற்றி யூருடை யீரே !
கற்ற நற்றவர்க்கே அருள்விரேல் கடையனேன் எந்தக் கடைத்தலை செல்வேன்? இன்று வந்து என்னை அடிமை கொள்ளாவிடில் பழி நுமதே.
ஐய ரேயும தடிய னானாகில்
அடிகள் நீரென தாண்டவ ராகிற்
பொய்ய னேனுளத் தவலமும் பயமும்
புன்க ணுந்தவிர்த் தருளுதல் வேண்டும்;
தைய லோர்புற நின்றுக ளிப்பச்
சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
மெய்யரே மிகு துய்யரே தரும
விடையரே யென்றன் விழியமர்ந் தவரே !
என்று கோடி வகையாக முறையிட்டு முறையிட்டுத் தோன்றாத் துணை வலியால் மனப்பேயை வென்றார் எம்பிரான்; ஒற்றிப் பற்றே யன்றி மற்றைப் பற்றற்றார்.



