அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

28. என் இச்சை

சிற்சபைத் தந்தை யன்றோ தனது அருட்சோதி விளக்கத்திற் காக இச் செல்வனை அருமையான ஞானப் பாலூட்டி வளர்த்து வருகிறான்! இறைவன் எத்தகை அருள் வழியில் தன் மைந்தனைச் செலுத்தி வந்தானென்பது வள்ளலார் வாக்கினின்றே நமக்குக் கிடைத்துள்ளது. ஆறாந் திருமுறை பிள்ளைச் சிறு விண்ணப்பம், பிள்ளைப் பெரு விண்ணப்பம் இரண்டையும் நோக்குவாம். அதுவே அருளாளர் சென்னை வாழ்வின் கண்ணாடி! அதுவே அருட்சமய சாரம் ! சுத்த சன்மார்க்க தீபம் ! …..

அம்மை யப்பனே, என்னை அடித்தது போதும்; தந்தை அடித்தால் தாய் அணைப்பாள்; தாய் தந்தை இருவரும் நீயே; என்னை அணைத்தருள்! எனையீன்ற வள்ளலே! பெற்ற பிள்ளையின் குணங்களைப் பெற்றவர் அறிவர்; நீ என் குற்றங்களை அறிவை; உன்னிடம் யான் பிறர் போல ஊண், பூண், உடை, உடைமை, பொய்யுடையார் விரும்பும் புணர்ச்சி, வானின்பம், எதுவும் விரும்பவில்லை; என்னை அணைந்து என்னுடன் விளையாடவே விரும்பினேன். நீ விழைவிக்க விழைந்தேன்; பிறர் மீது கருணையால் கைபிழையாமை கருதுகின்றேன். பிறர் நையப் பிழை செய்தேன். எனக்கு அறிவு வந்தது முதல் நீ இட்ட பணியே பணித்தவாறு உன்னிசையாற் புரிந்து வருகிறேன். நான் நீ தந்த மடவாருடன் பொருந்திய புணர்ப்பும் உன் புணர்ப்பேயன்றி என்னதல்லவே. எனக்கு அதில் ஒரு சிறிதும் சம்மதமில்லை; இன்னும் மடந்தையர் முயக்கில் எய்துவித்தால் அதுவும் நின் இச்சையே; சிறு பருவத்திலேயே நான் ஊன் வெறுத்ததை நீ யறிவாய்; நான் உனது திருவருளமுதே விழைந்தேன். இன்சுவை யுணவை நின் சுவை யுணவென்றே உண்கின்றேன். தற்சுதந்தரம் எனக்கதி லில்லை. பணத்திலே சிறிதும் ஆசை கொள்கிலேன்; சிறு பருவம் முதல் பிறர் கொடுத்த பணத்தை அவர்மீது எறிவேன்; கிணற்றிலும், குளத்திலும், மேட்டிலும் எறிவதை நீ அறிவாய். நீ எனக்குக் கொடுக்கும் பொருளையே பிறருக்குக் கொடுக்கின்றேன். இவ்வுடலாசை எள்ளளவும் பற்றிலேன். உடம்பு தடித்திட நினைத்திலேன். சிற்றின்ப சுக போகங்களை அருவருக்கின்றேன். இவ்வுலகத்தில் ராஜபோகமும் விரும்பேன். முத்தி பெறவும் எனக்கிச்சையில்லை.

இறக்கவு மாசை யில்லையிப் படிநான்
இருக்கவு மாசையின் றினிநான்
பிறக்கவு மாசை யிலை; யுலகெல்லாம்
பெரியவன் பெரியவ னெனவே
சிறக்கவு மாசை யிலை; விசித் திரங்கள்
செய்யவு மாசையொன் றில்லை;
துறக்கவு மாசை யிலை; துய ரடைந்து
தூங்கவு மாசையொன் றிலையே !
சற்சபைக் குரியார் தம்மொடுங் கூடித்
தனித்தபே ரன்புமெய் யறிவும்,
நற்சபைக் குரிய வொழுக்கமும், அழியா
நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமுந்
தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை யுலகத் துயிர்க்கெலா மின்பஞ்
செய்வதென் னிச்சையா மெந்தாய் !

உன்னைக் கலந்து ஊழி தோறூழியும் பிரியாத ஒருமை யுற்று, உன்னையே பாடி, பிறர்க் கினிதாற்றி, எவ்வுயிர்த்திரளும் என்னுயிரென்றெண்ணி, எவ்வுயிர்க்குறும் அச்சமும் இடையூறும் நீக்கி, சிற்சபைக்காளாக்கி, வேதாகமக் கலைகளை இயல்பெறப் புதுக்கி, தங்கம் போன்ற நல்லோர் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்க சபை கண்டு, சங்கஞ் சார்ந்து ஒரு கோயில் கண்டு, அச்சங்கத்தில் அடியேன் உன்னைப் பாடி யாடவும் இச்சை; கருணையே வடிவாகிப் பிறர் துயர் அச்சந் தவிர்த்து, புலைகொலை யற்ற நெறியில் உலகை உய்விக்க இச்சை. மண்ணுலகத்தில் உயிர் வருத்தத்தைக் கண்டும் கேட்டும் ஒரு சிறிதும் நான் சகிக்க மாட்டேன். இதுவே என் நவையிலா இச்சை; தவமிலேன் எனினும் உனதிச்சையால் இவற்றை அருளாய் !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !