அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

16. நம் இராமலிங்கமா !

சபாபதி பிள்ளையின் புராணப் பிரசங்கம் சென்னையில் பிரசித்தம். அவருக்குக் கையேடு வாசிப்பது அவரது நெருங்கிய உறவான ஒரு கைம்பெண்மணி; இன்னிசையும், சொற்றெளிவும், நல்ல கல்விப் பயிற்சியும், நினைப்புத் திறனும் வாய்ந்தவள்; தேவாரத் திருப் பாசுரங்களைத் தனது யாழ்க்குரலால் இனிமையாகப் பாடுவாள். பொருத்தமான மேற்கோள்களை இடையிடையே புராண விரிவுரையாளருக்கு எடுத்துக் கொடுப்பாள். அவ் வம்மைக்குத் தனிமறைவு கட்டிச் செப்பேடு படிக்கச் சொல்லி வந்தார் சபாபதி பிள்ளை. யாழுக்கு மேளம் போன்று சபாபதி பிள்ளையின் புராண விரிவுரை நிறைவுற அவ்வம்மை துணை யின்றியமையாததாம். மேலும் இருவர் வருவாயும் ஒரே குடும்பத்திற்கானது.

ஒருநாள் அவ்வம்மை உடல்நலமின்றிச் செப்பேடு படிக்க இயலாது போகவே, சபாபதி பிள்ளை புராணத்தை நிறுத்தி வைக்க மனமின்றி வருந்தினார். அதை உணர்ந்தாள் கற்புடை யில்லாள். “தம்பி! அண்ணல் வருந்துகிறார். நீ ஏடு படித்தால் விரிவுரை நடை பெறுமே, படிக்கிறாயா?” என்றாள். “அதற்கென்ன, ஆகட்டும்” என்றார் அருட்கனி வாயர். சபாபதி பிள்ளையோ ‘தம்பி எப்படிப் படிப்பானோ’ என்று ஐயுற்றுத் தீராப் பொறியாகச் சம்மதித்தார்.

புராணம் தொடங்கியது. கடவுள் வணக்கம் முடிந்தது. வீணைத் தந்தி போல இழையும் தமது இனிய குரலுடன் படிக்கத் தொடங்கினார் ஞானசம்பந்தரின் அருளிற் பழுத்த தேன்மொழிப் புலவர். முத்தும் மணியும் அள்ளித் தெளித்தது போலச் சொற்கள் மிளிர்ந்தன! படிக்குந் தெளிவு கவியிலுள்ளதைக் குரலால் ஓவியம் எழுதுவது போலிருந்தது. செய்யுட்களைப் பதம் பதமாகப் பிரித்து, மணி மணியாக, இடனறிந்து அணிபெறக் கொடுக்கிறார். குரலுடன் சொல்லுருக்கமும் சபையின் மனத்தை அள்ளுகிறது! சபாபதியாரால் தம் காதுகளை நம்பமுடியவில்லை. “நம் இராமலிங்கமா இப்படிப் படிக்கிறான்!” என்று மனமெல்லாம் மகிழ்வானார். சபையோர் “இவர் விரிவுரைக்கு அவர் வாசிப்பே தகும்! இதற்கு அது மிஞ்சியது. இது வரம் பெற்ற வாக்கு!” என்று பலவாறு புகழ்ந்தனர். அன்று புராண விரிவுரையில் அருட்சுவை பொங்கும் புதியதோர் இன்பமும் காணப்பெற்றது. பொழுது சென்றதே தெரியாது நெடுநேரம் கதை நிகழ்த்திச் சபாபதியார் வீடு சென்று மனைவியிடம் மகிழ்வு கூறினார். அம்மையார் முகமலர்ந்து ‘கடவுள் கண்ணைத் திறந்தார்’ என்று உள்ளுவகை யடைந்தார். இன்னும் இராமலிங்கம் அண்ணலுக்கெதிரே வருவ தில்லை. இன்னுந் தீவிரமாகத் தமது தனியறையில் உபாசனை தொடங்கினார் எம்பிரான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !