அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

53. தருமசாலை

தமது ஜீவகாருண்யக் கொள்கையைச் செயலிற் காட்ட தருமசாலை யொன்றமைக்க அடிகள் திருவுளம் பூண்டார். அன்பர்கள் திருவுளக் குறிப்பையேற்று ஓரிடம் குறிப்பிடச் சொன்னார்கள். திருவருள் நோக்கத்தால் பரவெளி போன்று எவ்வகையான உலக விவகாரமும் அற்ற சுத்த வெட்ட வெளியைக் காட்டி ஈண்டே தருமசாலை அமைந்து வளருதல் பொருந்தும் என்றார். அவ்வூராரே ஐயா அவர்கள் தருமசாலைக்கு எண்பது காணி நிலத்தைப் பட்டா செய்து கொடுத்தனர். அதுவே வடலூர் வெளி. தில்லை, திருவதிகை, திருமுதுகுன்றம், திருப்பாதிரிப் புலியூர் முதலிய பெரும்பதிகளுக்கிடையே தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தா நதியாகிய ஆறுகள் நாற்புறமும் மாலை சூட்ட, நடுவே அம்பலவாணன் ஆடரங்கு போல் நிராமயமாய் விரிந்த வெட்டவெளியாகிய வடலூர், பார்வதிபுரம், உத்தரஞான சிதம்பரம், ஞானசபை, சித்திபுரம் என்று அருமையாக அழைக்கப்படும். தமது 44-ஆம் ஆண்டு (பிரபவ வருஷம் வைகாசி மாதம் 11 வியாழன்) வள்ளலார் சித்திபுரத்தில் தமது அற்புதமான அருட்பணியைத் தொடங்கி, தருமசாலையைக் கட்டி முடித்து, ஆயிரக் கணக்கான பேர்களுக்கு நாடோறும் எக்குறையுமின்றி எவ்வேறுபாடு மின்றி உணவளித்து வந்தார். முதல் மூன்றுநாள் 10000 பேருக்கு உணவளிக்கப்பட்டது. பாலினும் இனிய ஒரு நல்லூற்றுக் கேணியும், ஐயருக்கு அடிமைப்பட்ட ஒரு மரமும் தருமசாலையை அடுத்துள்ளன. இங்கும் பல வியத்தகு செயல்கள் நிகழ்ந்தன. யாருக்கும் அங்கு முகங் கண்டு பசியாற்றும் அன்புத் தொண்டு இன்றும் சிறப்பாக நடந்துவருகிறது.

ஓர் இரவு, உணவெல்லாம் அளவாகத் தயாராகி, அனைவரும் உண்ணப் போகின்றனர். அச்சமயம் திடீரென நூறு பேர் வந்துவிட்டனர். என்ன செய்வதென அங்கிருந்தவருக்குத் தோன்றவில்லை. இருந்த உணவோ போதாது; புதிதாகச் சமைத்தற்கும் அவ்விரவில் முடியாத காரியமாயிருந்தது. ஐயா அவர்களோ, ‘இலை போடுங்கள்!’ என்று கூறித் தமது திருக்கையால் பரிமாறவே எல்லாருக்கும் அவ்வுணவு போதியதா யிருந்தது. அவர் கை கற்பகக் கையன்றோ? அருளும் அன்புமாகிய சங்கநிதி பதும நிதி யன்றோ அப்பூங்கரங்கள்!

மற்றொரு பகல் உணவுப் பொருள்கள் அறச்சாலையில் இல்லை. அன்பர் முறையிட்டனர். சற்றுத் திருவருட் கலப்பி லிருந்து, ‘எல்லாம் நாளைவரும்’ என்றார் வள்ளலார். மறுநாளே திருத்துறையூரினின்று மூன்று வண்டி நிரம்ப அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் வந்தன. ‘சுவாமிகள் எங்கள் கனவில் தோன்றிக் கட்டளை யிட்டவாறு கொணர்ந்தோம்’ எனறு கொணர்ந்த அன்பர் கூறித் திருவருட் பிரசாதம் பெற்று வணங்கிச் சென்றனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !