
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
4. சிவயோகியார்
நண்பகல், இராமைய பிள்ளை அலுவலாக வெளியே சென்றிருந்தார். செல்விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருக்கும் சின்னம்மையார், திடீரென முதிர்ந்த சிவயோகியாரொருவரைத் தம் மனைமுன் கண்டார். தூய வெண்ணீற்றுத் திருமேனி; தலையிலுங் கழுத்திலும் அக்கம்; இடையிற் புலியுரி; கையில் யோக தண்டம்; நாவில் ஐந்தெழுத்து; பழுத்தவுள்ளம் முகமலரில் விளங்குகிறது ! அச் சிவ யோகியாரைச் சின்னம்மையார் வணங்கி வரவேற்று, இன்சொற் கூறி, மலரடி கழுவி, நன்மணை யிருத்தி, நாண்மலர் தூவிப் பணிந்து பின்வருமாறு போற்றினார்:-“பரமனுருவாய் எழுந்த பெரியோய், என்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில்! தங்கள் புண்ணிய வரவால் இது புனிதமுற்றது! ஏழ்பிறப்பும் எம்மரபு உய்ந்தது அடியேமை யாட்கொள்ள அருள் கொண்டுற்ற அரனே, யான் அன்பிற் படைக்கும். அருஞ்சுவை வழிபாட்டை ஏற்றருள்க!” பிறகு தலை வாழையிலை பரப்பி, அறுசுவை யுண்டி அன்போ டளித்தார். யோகியார் அமுதருந்தினார்; அம்மையாரின் அன்பும், அடியார் நேயமும், சிவப்பற்றும், அருங்குணப் பெருந்தகையுங் கண்டு மகிழ்ந்து, புகழ்ந்து, வாழ்த்தித் திருநீறளித்தார். “முகமலர்ந்து விருந்தோம்பும் அமுத சுரபியே ! நின் புண்ணிய வாழ்வும், புனிதச் செயலும், அளவற்ற அன்பும், அரனடி நேயமும், அடியார் வணக்கமும் என் மன மகிழ்வைத் தூண்டின. இத் திருநீறே யான் தரும் கைம்மாறு! இதைப் பூசி யுட்கொள்வாயாக! அதன் பயனாக ஒரு கடவுட் புதல்வன் சுத்த சமரச சன்மார்க்கத் தந்தையாகத் தோன்றி, உலகில் அருளாடல் புரிவான்” என்று ஆசீர்வதித்து மறைந்தார் சிவயோகியார். அம்மையார் வணக்கமுடன் திருநீற்றை யேற்றுச் சிவசிந்தையுடன் அணிந்து உட்கொண்டு, தன் கொழுநன் வந்ததும் நிகழ்ந்ததை யுரைத்தார். பிள்ளையவர்களும் திருவருட் செயலை வியந்து, இன்பவெள்ளத்திற்றோய்ந்தார். சின்னம்மை வயிற்றில் அருட்சோதி புகுந்தது.



