அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

58. ஒளிக் கடவுள்

பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகையென் கணவர்திருப் பேர்புகலென் கின்றாய் அருகர்புத்த ராதியென்பேன் அயனென்பேன், நாரா யணனென்பேன், நானென்பேன், ஆதிசிவ னென்பேன் பருகுசதா சிவமென்பேன், சத்திசிவ னென்பேன் பரமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரம மென்பேன் துருவுசுத்த பிரமமென்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவ மென்பனிவை சித்துவிளை யாட்டே.

வள்ளலாரின் சமரசக் கடவுள் இவ்வாறு எம்மதத்திற்கும் சம்மதமானவர். எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இரண்டற்ற அருட் சிவமே அவர் கடவுள். அவ்வருட் கடவுளை உருவருவாக விளங்கும் ஒளியாக அவர் கண்டோதினார். கண் காண்பவற்று ளெல்லாம் சிறந்தது ஒளியே யன்றோ? அச்செழுஞ் சுடரையே சுத்த சமத்துவ சிவவெளிக் கடையாளமான நிலைக் கண்ணாடிமுன் வைத்துக் கருதும்படி வள்ளலார் தமது அருணெறிச் சங்கத்தைப் பணித்தார். அருட்சோதி புருவ நடுவே தோன்றும். புருவ நடுவே தியானத்தை ஊன்றினால் இவ்வொளி விளங்கும்.

ஒளியொன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி ஓங்குகின்ற தன்றியண்ட பகிரண்டங் களிலும் வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளங்குமகப் புறத்தினொடும் புறப்புறத்தும் நிறைந்தே உளநின்ற இருணீக்கி யிலங்குகின்ற தன்மை உலகறியும் நீயறியா தன்றுகண்டாய் தோழி தனிநின்ற ஒளிமயமே வேறிலையெல் லாமும் தானெனவே தாகமங்கள் சாற்றுதல் சத்தியமே.

இதுவே வேதாந்த வொளி, சித்தாந்த விளக்கு, யோகாந்தம், நாதாந்தம், போதாந்தம், கலாந்தங் கடந்த துரியமுடி யனுபவ சுத்த சித்தாந்தத் தனிப் பெருஞ்சுக நிலை. ஆனந்த நிலைகளின் அனுபவ நிறைவு அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணையே.

காட்சியே காண்பதுவே ஞேயமேயுட்
கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே யோங்கு
மாட்சியே உண்மையறி வின்ப மென்ன
வயங்குகின்ற வாழ்வே மாமௌனக் காணி
யாட்சியே, யாட்சிசெய்யும் அரசே, சுத்த
அறிவேமெய் யன்பேதெள் ளமுதே, நல்ல
சூட்சியே, சூட்சியெலாங் கடந்து நின்ற
துரியமே, துரியமுடிச் சோதித் தேவே !

இந்தச் சோதித் தேவை உள் அனுபவமே காட்டும்.

இப்பொருள் கோதகன்ற யோகர் மனக் குகையில் வாழும் மோகனக் கோமளம்; வாதகன்ற ஞானியர் மதியிலூறும் வானமுதம்; ஆனந்த மாமழை. இந்த இயற்கையுண்மைக் கடவுளின் இன்பநிலை யனுபவம் சுய முயற்சியால் எய்தாது. திருவருட் கருணையாலே யெய்தும். அருளறிவிப்பதே அறிவு; மனிதர் அறிவறிவிப்பது இருள். திருவருட் சுதந்தரத்தினாலேயே நித்தியானந்த நிலை யெய்தும். அதற்கு நமது தேக சுதந்தரம், போக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் எல்லாம் அவனுக்கே (திருவருட்சிவன்) ஊணாக்கவேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !