அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

44. நடராஜமூர்த்தம்

ஆன்ம ஞானம் புலர்ந்து ஆன்ம வுணர்வே வழிபாடாகும் உயர்ந்த அரு வணக்கத்திற்கு உரு வழிபாடு உறுதுணையாகு மென்றே ஆன்றோர், அறிஞரெல்லாம் இந்த உருவழிபாட்டைக் கைக்கொண்டனர். எல்லாம் அவனுரு; அணுவணுவிலும் அவனுளான். அணுவணுவும் அவன் வடிவே. உலக வடிவாக அவனுளான். உலகையே அருட்பணி மலரால் வணங்குதல் அவனை வணங்குதலாகும். எங்கெங்குப் பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங்கிருக்கும் அவனை ஆருயிர் வடிவாக அன்பு மலரால் வழிபடலாம். மூர்த்தி தலம் தீர்த்தமும் அவன் வடிவே யாதலின் அவற்றிலும் அவனைக் கண்டு அன்பு செய்யலாம். இவை யெல்லாம் ஓடியலையும் மனத்தை ஒன்றில் நிலைநிறுத்தும். மனம் நிலைத்துச் சிந்தை யொழிந்து அகந்தை யழிந்து அருளுதித்தால், உணர்வெனும் மலரால் உள்ளத்தானை இடைவிடாது என்றும் வழிபட்டு, கோயில், மூர்த்தி,மலர்,மஞ்சன நீர், வழிபடும் கை எல்லாம் உள்ளாகி நிற்கலாம். சில மதங்கள் உருவை வெறுப்பன எனினும் அவையும் ஒரு குறியைத் தொழுவனவே; பெரும்பாலும் மதங்கள் கதிர், பிறை, தீ, வளி, வெளி முதலிய ஏதேனும் ஒரு வடிவில் உரு வணக்கமே செய்கின்றன. அரு வணக்கம் அரிது, பெரிது; உரு வணக்கம் எளிது; உண்மை யன்பிற்கேற்ற பயனளிக்கத் தக்கது. சைவ சமயம் உரு, அரு, உருவரு, அருவுருவாக இன்பக் கடவுளை வழிபட்டு எல்லாச் சமயங்களையும் தன்னுளடக்கி நிற்கிறது.

உருக்களிற் சிறந்தது நடராஜ மூர்த்தி. அதில் எல்லாம் அடங்கியுள்ளன. தீயை வழிபடுவோருக்கு அங்குச் சிற்கனல் உண்டு; வெளி வணக்கஞ் செய்வோர்க்கு தகராகாய முள்ளது; ஒலி வணக்கம் செய்வோர்க்கு (அதாவது சீக்கியர் போன்று தமது சமய நூலைப் பணிவோர்க்கு) டமரக நாதமுள்ளது. தண்மை வடிவாகப் பணிவோர்க்கு கங்கை யுள்ளது. நடராஜ மூர்த்தத்தில் எல்லா வழிபாடும் அடங்கும். சிற்பரயோமத்தில் அருவா யுணர்ந்து கலக்கும் உயர்ந்த சிவாத்துவிதானுபவமும் எய்தும்; அதனால் உள்ள மன்றத்தில் நடமிடும் சோதி நடராஜனையும் காணலாம். தனக்கு அருமையான பொருள் யாவும் அவன்; காண்பது கேட்பது யாவும் அவன்; உள்ளும் புறமும் அவன் என்றுணரும் உயர்ந்த நிலையை நம் வள்ளற் பெருமான் அடைந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !