
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
32. அன்புசெய் நெஞ்சே !
பிறவி ஞானியான அடிகளின் மனம் எப்போதும் இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்ப வானிற் சஞ்சரித்துக் கொண்டே யிருந்தது. மனம் சற்று உலக வாசனையை முகரத் தொடங்கின் அவர் அதற்குப் பலமான சாட்டை கொடுப்பார். ஞானத்திற்கு விசார மார்க்கமே சிறந்தது. வள்ளலார் உள்ளே இடைவிடாது அறிவு சொல்லி நெஞ்சைத் தம் வயப்படுத்தி வென்றார்; ஆண்டவனிடமும் முறையிட்டார். விண்ணப்பக் கலி வெண்பா, நெஞ்சறி வுறுத்தல் இரண்டும் இதற்குச் சான்றாம். இவை வைராக்கியக் கனற் பிழம்புகள்!
“காட்சியாய்க் காண்பானாய்க் காணப்படு பொருளாய், சூட்சியாய், சூட்சியால் தோய்வரிதாய், போக்குவரவில்லாப் பூரணமாய் நிற்கும் பிரமன், சிறு பெண் பிள்ளை விளையாட்டுள் அண்டமெலாம் தோயாது கூட்டி, வித்தின்றி விளைவித்து அருளளிக்கும் சித்தன்; நீட்டாது நெஞ்சு நிலைத்தவர்க்குத் தன்னுண்மை காட்டாது காட்டி நிற்குங் கள்வன்; தம்மை ஒளிக்கின்றோர் தம்முள் ஒளிந்து, உள்ளவெலாங் கன்னமிடக் கைவந்த கள்வன்; நான் நாணத் தானென்று நிற்கும் சதுரன்; உள்ளூறி யுள்ளத்துணர்வூறி யவ்வுணர்வின் அள்ளூறி யன்பிற் கலந்தவன்; அன்பாய் நம்மை வளர்க்கும் அப்பன்; எள்ளித் திரிந்தாலும் இந்தாவென் றின்னமுதம் அள்ளிக் கொடுக்கும் அன்பன்; வாடியழுதால் நாடி யெடுத்த ணைக்கும் நற்றாய்; வஞ்ச மெண்ணினும் நெஞ்சில் வையாது ஆபத்தில் அருளுதவும் நேசன்; உள்ளங் குளிர வுயிர் குளிர மெய் குளிரக் கொள்ளுங் கருணைக் குறிப்பழகன்; பித்தா எனினும் பிறப் பறுப்பான்—அத்தகைய பரம்பொருளை அன்பு செய், நெஞ்சே! இன்றேல் நீ கல்லே! வன்னெறியிற் செல்லாதே! மாயத்தில் வீழாதே; காமப் பேய்பின் நாய்போ லலையாதே! மாதர் மையலில் மயங்காதே! பொன்னாசை யொழி; வீண் மயக்கொழி ! மண்ணாளும் மன்னர் மண்ணாலழிந்தனர்; மண்ணாசை யொழி! கோபக் கடலிற் குதியாதே! நீயா ரென்றறி! ஆவதும் அழிவதும் நின்னால். அன்பே வடிவாய், அருளே உயிராய், பேரின்பமே உணர்வா யிருக்கும் நல்லோர் கூட்டம் நாடு! பாழ் வாழ்வு நீங்கிப் பதி வாழ்வில் வாழ்!” என்று நெஞ்சறி வுறுத்துவார் வள்ளலார்.



