
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
42. தலயாத்திரை
அன்பர் கண்ணையுங் கருத்தையும் கண்ணிபோற் பிடிக்கும் தில்லையப்பன் திருவடி தொழுது சில காலம் வள்ளலார் தல யாத்திரை செய்து ஆங்காங்குத் தம் அருட்பா மலர்களாற் கடவுட் டந்தையை வணங்கிச் சென்றார். இந்த யாத்திரையின் கண் நிகழ்ந்த வியத்தகு செயல்கள் பல. இந்த அருள் வடிவையும், அன்பருவி போன்ற வாக்கையும் கண்ணாலும், காதாலும் பருகிய அன்பர் கொண்ட பெருங்களிப்பிற் களவில்லை. வள்ளலார் சீர்காழியில் ஓர் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார்; ஒருவருக்கிருந்த தீராக் குன்மநோயைத் திருநீறீந்து தீர்த்தார். வைத்தீசுவரன் கோயிலில் மிகவும் அரிய பதிக மொன்றருளினார். திருவாரூர், திருச்செங்காட் டங்குடி, திருப்புகலூர் முதலிய பெரும்பதிகளைத் தரிசித்துத் திருவுறல் உற்சவத்திற்கு எழுந்தருளினார்.



