அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

33. என் பிழைகள்

சிலகால் எம்பிரானார் தம்மையே யிகழ்வார்; தேவ தேவனே! உள்ளபடி ஒளியாமல் உரைக்கின்றேன்; எள்ளடியேன் வன்சொல்லன்; இன்சொலறியேன்; செக்குற்ற எள்ளெனவே சிந்தை நைந்தேன்; முக்குற்றந் தன்னை முனிந்ததில்லை. சாதகம் அறியேன். பாதகமென்றால் எனக்குப் பாற்சோறு; கோளுரை யென்றாற் கொண்டாட்டம்; நல்ல நூல் வாசிக்கவென்றால் வாய் நோகும்.

சிந்தையொன்று வாக்கொன்று
செய்கையொன்றாய்ப் போகவிட்டே
யெந்தைநினை யேத்தா திருந்ததுண்டு—புந்தியிந்த
சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல்
எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு—ஒள்ளியரால்
எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாம்
கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு.
வெஞ்சலஞ் செய் மாயா விகாரத்தி னால்வரும் வீண்
சஞ்சலமெல் லாமெனது சம்பந்தம்.
இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
இல்லையென்ப தென்வாக் கியல்புகாண்—தொல்லுலகை
ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணி
பூண்டாலு மென்கண் பொறுக்காது !

என் பிழைகள் எத்தனையோ சொல்ல முடியாது! எல்லாம் நீயே பொறுக்கத் தகும். என் சொற் கடங்காத இந்த ஏழை மனத்தால் இளைக்கின்றேன். நீயே எனக்கு ஆதரவு.

ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் மோகமதிற்
போய்ப்படு மோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின் வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் மாய்ப்பவரு
மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன்
இப்பாரி லுன்மேலன் பில்லெனினும் அன்பனென
ஒப்பாரி யேனு முடையேன் காண் !

உன் பாதம் பற்றினேன். என்னைக் கைவிடேல்!” என்று உலகின் குறைகளை யெல்லாந் தம்மேலுறுத்தி முறையிடுவார்.

பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
பின்னொன் றறியேன் பிழைநோக்கி—யென்னை
அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே
பிடித்தேனுன் பொற்பாதப் பேறு

என்று சிவனைப் பற்றுவார்.

அந்தோ துயிரிற் சுழன்றாடு மேழை யவல நெஞ்சஞ்
சிந்தோத நீரிற் சுழியோ! இளையவர் செங்கை தொட்ட பந்தோ? சிறுவர்தம் பம்பரமோ? கொட்டும் பஞ்சுகொலோ? வந்தோ டுழலுந் துரும்போ வென்சொல்வ தெம் மாமணியே !

என்று முறையிடுவார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !