
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
60. சாகா நிலை
அடிகள் குறித்த சாகா நிலை யென்பது பிறப்பிறப்பற்ற சுத்தான்ம நிலை. தெய்வ சேதனத்தில் (சிற்சக்தி) அல்லது அருளுணர்வில் வாழ்வதே சாகா நிலை. அத்தூய நிலை யடைந்தால், உடலும் பொன்னொளிரும். “மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக்கால் ஈசனைக் காட்டும் உடம்பு.” தெய்வத் திருவருளுக்கு மருட்போதம் தற்போதம் சார்போதமான ஆணவ வாழ்வை ஊணாக்கவேண்டும். இறைவன் நம்மைக் கருவியாகக் கொண்டு தன்னிச்சையை நடத்தவே, நாம் அவனுடன் அடங்கி இணைபிரியாத அருட் கலப்பில் இருத்தல் வேண்டும். எல்லாம் அவன் மயம், அவன் செயல், அவனருள் வடிவம்; அவன் சாதி மதங் கடந்த பொது நடத் தந்தை. எல்லா உயிர்களும் அவன் திருமேனி என்னும் சமரச நோக்கம் இன்றியமையாதது.
இறந்தவரை யெடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரநீர் ஏன் அடைய மாட்டீர்?
மறந்திருந்தீர் பிணிமூப்பிற் சம்மதமோ நுமக்கு?
மறந்துமிதை நினைக்கினல்லோர் மனநடுங்குங் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கமொன்றே பிணிமூப்பு மரணஞ்
சேராமற் றவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மி னிங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்ப முற்றிடலாம் விரைந்தே.



