
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
46. கருங்குழி
பல தலங்கள் சுற்றி அறிவு மழை பொழிந்து, வள்ளற் பெருமான் தில்லையப்பனைச் சார்ந்தார். அப்போது இவரது பிறப்பிடமான மருதூர், தன்னிடம் உதித்த அருள் மாணிக்கத்தை அழைத்து உபசரித்தது. அன்பின் வள்ளல் மருதூருக் கடுத்த கருங்குழி சேர்ந்தார். அங்குப் பரசுராம பிள்ளை சிவபதமடைந்தார். அவருக்கு இறுதிக் கடன்கள் இசைபெற முடித்துச் செல்லவிருக்கும் போது அவ்வூர்ச் செல்வர் வேங்கட ரெட்டியார் அடிகளின் அருணெறியில் ஈடுபட்டுத் தமது திருமனையிலேயே தங்கும்படி அன்புடன் வேண்டிக் கொண்டார். அப்படியே வள்ளலார் திருவுளம் பூத்தருளினார். வள்ளலார் தமது வாழ்வின் இருப்பிடமாகக் கொண்ட கருங்குழிக் குற்றது தமது 28-ஆம் ஆண்டில். அருட்சோதியப்பன் தன் மைந்தனை எப்பணிக்காக உலகிற்கு வர வழைத்தானோ அப்பணி தொடங்குங் காலம் வந்துவிட்டது. அவன் அவ்வருட் பணிக் களத்திற்கே மைந்தனைக் கொணர்ந்து விட்டான். கருங்குழியில் வள்ளற்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் பல. அதனுடன் சுற்றுமுள்ள ஊர்களிலும் அவ்வப்போது நிகழ்த்திய வியத்தகு செயல்களை ஒருங்கே கூறுவாம்.



