
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
20. ஆட்கொண்டான்
இஃது எவ்வாறிருப்பினும், வள்ளலார் ஆண்டவன் தம்மை ஆண்டு கொண்ட நேர்த்தியை நான்காவது திருமுறையில் அருட் பாக்களாக அள்ளித் தெளித்துள்ளார். அவற்றைக் கூறி அருட் சோதிக்குருவின் குறிப்பை முடிப்பாம்:
“என்னை யாட்கொண்ட நித்திய பரிபூரண சுத்த சிவமே! அம்பலத்தரசே! சோதி நடராஜ மணியே! என் விருப்பமெலாம் நின்னருள் விருப்பமே. என்னை வலிந்தாட்கொண்ட மணியே! அறியாத சிறியேனை அறிவோங்கச் செய்தாய்; என் பருவ மறியாமல் இன்ப நிலை தந்தருளினை. ஒன்று மறியாத இளம் பருவத்தே என்னுளத்தமர்ந்து, யான் மயங்குந் தோறும் அன்னை யெனப் பரிந்தருளி, அப்பனெனத் தெளிவித்து அறிவுறுத்தினை.
பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
பருவத்தே யணிந்தணிந்து பாடும்வகை புரிந்து,
நாடும்வகை யுடையோர்கள் நன்குமதித் திடவே
நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
நிறுத்தினையிச் சிறியேனை நின்னருளென் னென்பேன் !
கூடும்வகை யுடையரெல்லாங் குறிப்பெதிர்பார்க்
கின்றார்; குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே!
“என் உளத்தே எல்லா மறிவித்து மன்னுகின்ற மெய்யறி வின்பப் பொருளே! நின்னருளால் நான் கற்றதும், கேட்டதும், கண்டதும், கொண்டதும் நின்னிடத்தே. நான் மேலேற முடியாது இளைக்கின்ற பருவத்தில், ஒரு வீரிய சக்தியைக் கைகொடுத்து மேலேற்றச் செய்தாய்; அடியார் உள்ளமெனும் பொதுவில் நடமாடும் பொருளே! நான் கேட்கின்றவை யெல்லாம் ஒருங்கே யுணர்ந்து அளிக்கின்றாய் !
அஞ்சாதே யென்மகனே அநுக்கிரகம் புரிந்தாம்;
ஆடுகநீ வேண்டியவா றாடுக விவ்வுலகில்;
செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றி லாடுந்
திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி,
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்;
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
துரியநடு வேயிருந்த சுயஞ்சோதி மணியே !
ஊனந்தங்கிய மாயை யுடலிலிருந்தும் ஊனமில்லா திருக்கின்ற உள வருளினாய்; இறைவா! நினதருளாலே என்னைக் கண்டுகொண்டேன். என்னுள் உன்னைக் கண்டேன்; பின் இருவரும் ஒன்றாக உறைவது கண்டு அதிசயித்தேன். எனக்குப் புத்தி சித்தி அறிவு அளித்து அழியாப் புனித நிலையிலிருக்கப் புரிந்த பொருளே! நீ நான் எனும் போதமும் நீக்கித் தனித்த சுகாதீதமும் தந்தருள்! தீய சமய நெறி விடுத்து உண்மை திருவருட் பொது நெறி சேர்த்தாய். அன்னிய மில்லாத சுத்தாத்வைத நிலையமர்ந்த பரம்பொருளே, அப்பா! நின் திருவருட் பேரமுதத்தின் அருமை யறிந்தேன். இப்பாரில் என்னை வலிய அழைத்துக் கரத்தில் “பெருங் கருணையின்பம் இனிதளித்தனை.”



