
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
51. சோதனை
அருட்பாவைத் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றோர் வியந்து வள்ளற் பெருமானை நேரே கண்டு வணங்கி ஆட்பட்டனர். ஆனால், சில பழந் தமிழ்ப் புலவர்களுக்கு அதை அருட்பா வென்றழைப்பது பிடிக்கவில்லை. நால்வர் ஓதிய தமிழே திருவருட்பா வென்று பெரிய சபை கூடிக் கிளர்ச்சி செய்து “போலி யருட்பா மறுப்பு” என்றொரு நூல் வெளியிட்டனர். அதற்குத் தொழுவூர் வேலாயுத முதலியார் போன்றோர் ஆணித்தரமான மறுப்புகள் வெளியிட்டனர். அக்காலத்தில் கிளர்ச்சிகள் வலுத்துத் தம்மைச் சுற்றித் தர்க்கவாதச் சிலம்பங்களும், கண்டன வாள் வீச்சுக்களும், முட்டுக்கடாக்களும் இகழ்ச்சிப் பறைகளும் பலமாயிருக்கும் போது எம்பெருமானார் என்ன செய்தார்! இதுவும் அவனருட் கூத்தென நகைத்துத் தம் இன்கனி மொழியால் “தம்மை யுணர்ந்தோர் பாட்டெலாம் அருட்பா; மற்றைப்பாடல் மருட்பா. ஏழு திருமுறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பி அவற்றிற்கு அருட்பா என்று பெயரிடவில்லை; சமயாசாரியார் அருளியதைத் தேவாரம், திருவாசகம், தமிழ்வேதம், திருநெறித் தமிழ், திருப்பாட்டு என்றும் ஒன்பது நாயன்மார் இயற்றியதைத் திருவிசைப்பா வென்றும் அருண்மொழிப் புலவர் வாக்கைப் பெரியபுராணம், திருத் தொண்டர் புராணம் என்றும் வழங்கல் மரபு” என்று சாந்தமாகக் கூறித் தம்முள் அமைதி யெய்தியிருந்தார். அடக்கம் அமரருள் உய்க்கும். அருட்பா ஜீவநதி போல அன்பர் உள்ளத்தில் இன்ப வெள்ளம் பெருக்கி யோடுகிறது. அதை யெதிர்த்தோர் வாய் அடங்கித் துயில்கின்றது. இவையெல்லாம் காலத்தின் சோதனை. அதனால் வள்ளலாரின் அடக்கமும் பெருமையும் சிறந்து விளங்கின. தம்மை வன்மொழியால் தாக்கிய மாந்தர்க்கும் இனிமையே கருதி நம் வள்ளற் பெருமான் மீண்டும் தமது அருணெறியைக் கூறலாயினார்:
நீர் பிறரோ? யானுமக்கு நேயவுற வலனோ?
நெடுமொழியே யுரைப்பனன்றிக் கொடுமொழி சொல்வேனோ?
சார்புறவே யருளமுதந் தந்தெனைமே லேற்றித்
தனித்தபெருஞ் சுகமளித்த தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப்பொதுவிற் றிருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த;
ஓர்புறவே யிதுநல்ல தருணமிங்கே வம்மின்
உலகியலீர் உன்னியாவா றுற்றிடுவீர் விரைந்தே!
என்று மீண்டும் மீண்டும் வள்ளற்குயில் தனது தேன்மொழியால் உலகை அழைத்தது.



