அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

52. ஜீவகாருண்யம்

தந்தை தமக்குப் பணித்த அருணெறியை இனி உலகறிய விளக்கும் காலம் வந்துவிட்டது. உயிர்களிடம் வள்ளற் பெருமானுக்குப் புத்தரைப் போலப் பேரிரக்கம் பிறந்தது. எல்லா உயிர்களையும் தம்முயிரெனக் கருதினார். இப்போது தமது உயிரிரக்க (ஜீவகாருண்ய) ஒழுக்கத்தை நூலாக வெளியிட்டார். அதன்கண் உயிர்களின் பசியாற்றல் பேரறமென அருமையாகக் கூறியுள்ளார்:-

“புண்ணியமென்பது ஜீவகாருண்யம் ஒன்றே; பாவ மென்பது ஜீவகாருண்ய மின்மையே. ஜீவகாருண்யத்தாலேயே கடவுளின் இயற்கை விளக்கமான அருளையடைய முடியும்.ஜீவர்களெல்லாம் சர்வ சக்தியுள்ள கடவுளால் படைக்கப்பட்ட ஓர் உரிமையுள்ள சகோதரரேயாவர். உயிரிரக்கமுள்ளவர்கள் சுகம் பெறுவர்; அஃதின்றி அறிவும் அன்பும் அருள் விளக்கமுந் தோன்றா. கடவுள் அருளைப் பெறுதற்கு உயிரிரக்கமே முதன்மையான சாதனம். ஊழ்வகையாலும், அஜாக்கிரதையாலும், பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்பவைகளாலும் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்து கொள்ள மாட்டாமல் ஜீவர்களுக்கு அவற்றை நிவர்த்தி செய்விக்கத்தக்க சுதந்தரமுள்ள ஜீவர்கள் ஜீவ காருண்யத்தால் நிவர்த்தி செய்விக்கவேண்டும். பசி நீக்கலும், கொலை நீக்கலும் விசேஷமான உயிரிரக்கம். கொலையுணவு கொடுமை, மரம், புல், நெல், முதலியவற்றின் வித்து, காய், கனி, தழை முதலியவை உண்ணல் உயிரிரக்கத்திற்கு விரோதமில்லை. அவை பரிசமான ஓரறிவுடையன. அவற்றின் முதல்களை விடுத்து, வித்து காய்கனிகளையே உண்கிறோம்.

தாவரங்களுக்கு மனம் முதலிய அந்தக்கரணவிருத்தி யில்லை. அவற்றை நாமே வித்தூன்றி விளைவிக்கலாம். ஆதலின் தாவர உணவு கொண்டு பசி வருந்துவோருக்கு அருத்தவேண்டும். பசிக் கொடுமை அனைவரும் அறிந்ததே. எல்லா ஜீவர்களிடமும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை யறிந்து சன்மார்க்கத் திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பொது நோக்குடன் பசி தவிர்க்க வேண்டும். உணவளித்தலை எக்காலத்தும் உரிய தொண்டாகக் கொள்ள வேண்டும். பிறர் பசியாற்றல் எல்லை யற்ற புண்ணியப் பயனுடைத்து. ஆன்ம உருக்கம் உண்டாக அந்த ஆன்மாவினுள் ளிருக்கும் கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டு விளங்கும். அத்திருவருள் விளக்கத்தால் கடவுள் இன்பம் அனுபவமாகி ஜீவர்கள் பூரணமாகும். ஜீவகாருண்யம் ஆன்மவுரிமை யென்றறிக!

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்திற்
கண்விழித்து வயங்கும் அப்பெண் உருவாணை
யுருவாக்கி யிறந்தவரை யெழுப்புகின்ற வுறுவனேனும்
கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக்
கடிந்துண்ணுங் கருத்த னேலெங் குருவாணை
யெமதுசிவக் கொழுந்தாணை ஞானியெனக் கூறொணாதே !

என்றும்

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் ளிருந்தீர்!
பட்டினி கிடப்பதைக் பார்க்கவு நேரீர்
பழங்கஞ்சி யாயினும் வழங்கவு நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோற் கிளைத்தீர்!
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே!

என்றும், உயிரிரக்கமற்றவர்க்கு நம் அருணெறிப் பெருமான் சூடு கொடுக்கின்றார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !