
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
37. குடும்ப கோஷம் !
ஆணவம், மாயை, காமியம் என்னும் அரக்கிகளை மணந்து மடமை மனம் புத்தி சித்தம் அகங்காரம் முக்குணங்கள் என்னும் பொல்லா மக்களைப் பெற்று, குடிக்கூலி வீடான இவ்வுடலில் வாத பித்த கபங்களுடன் ஜீவன் படும் சம்சாரத் துயரங்களைக் ”குடும்ப கோஷம்” மிகத் தெளிவா யெடுத்துரைக்கிறது:-
“பகலும் இரவும் பாவிகள் அலைத்தனர்; கிணறு வெட்டப் பூதந் தோன்றியதென்னும் சொல்லை யொத்தது. மூன்று மாதரும் முழுப்பாய்ச் சுருட்டிகள். குடும்பத்துடனே குடித்தனஞ் செய்யக் குடிக்கூலிக்குக் கொண்டமனையில் கண்ட காட்சிகள் கன விநோதங்கள், இராமாயணத்தும் பாரதத்து மில்லை; இழிவினும் இழிவது, எண்சாண் உள்ளது; மலமுஞ் சலமும் மாறா வொழுக்கது; சுற்றிலும் ஒன்பது பொத்தல் உடையது. இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர் தறுகண் கடையர்; தயவே யில்லார்; பிண்ட மென்னும் பெருங் குடிக்கூலி அன்றைக் கன்றே நின்று வாங்குவர்.”
இக் குடும்ப வாழ்வில் வள்ளலாரின் சில தினசரிக் குறிப்புகள் காணப்படுகின்றன. வேதாந்தம், சித்தாந்தம், இதிகாச புராணங்கள், இலக்கியம், சமய நூல்கள், வாய்ப்போர், விவகாரங்கள், மத வழக்குகள், வம்புகள், வீண் கதைகள் ஆகிய இவை அவரைச் சூழ்ந்து நிற்கும்; அவ்வவற்றிற்குச் சமயோசிதமாய்ச் சமாதானஞ் சொல்லி இயன்ற மட்டில் ஈடு தருவார்; மீதி நேரம் தமது நித்திய கருமத்திற் செலவாகும். என்ன?
பின்னர் மனையின் பின்புறத் தேகிக்
கலக்கு மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்
சோமனைப் போலவெண் சோமனைத் துவைத்து
நன்னீ ராடி நறுமலர் கொய்து
தேவருக் கேற்ற திரவியங் கூட்டி
வெண்ணீ றதனை விளங்கப் பூசிப்
புகழ்ருத் ராக்கப் பூனை யென்ன
உற்ற செபவடம் உருட்டி யுருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்
செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற்பூசனை அமர்ந்தங் காற்றி
ஊன்பிண் டத்திற் குறுபிண்ட மீந்து
குடிக்கூ லிக்கடன் குறையறத் தீர்த்துப்
பகல்வே டத்திற் பலரை விரட்டி
நித்திரைப் பரத்தை நேர்ந்து கூடவும்
பொழுதுஞ் சரியாய்ப் போகின் றதுவே.
உட்குடும்பத்தை முற்றும் அடக்கி முறைப்படுத்தித் தம் ஞான மணவாளனிடம் ஒப்புவித்து, மனித சாதியையும் இருட் குடும்பத்தினின்று அருட் குடும்பத்திற்கு ஆளாக்கவே வள்ளலார் வாழ்வின் ஒவ்வொரு மூச்சும் வேள்வியாக்கப் பெற்றது. மேலும், தம்மையே ஞான நடத்தரசிற் குரிய கிழத்தியாகப் பாவித்து அவர் செய்த அன்பு, நம்மாழ்வார் அன்பைப் போன்றது.
அறியாத பருவத்தே யென்னைவலிந் தழைத்தே
ஆடல்செயுந் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்.
செறியாத மனச்சிறியேன் செய்தபிழை யெல்லாந்
திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை யணிந்தார்.
பிறியாமல் என்னுயிரிற் கலந்துகலந் தினிக்கும்
பெருந்தலைவர் நடராசர் எனைப்புணர்ந்தார்;
அருளாம் அறிவாளர் புறப்புணர்ச்சி யெனையழியா தோங்க
அருளியதீண் டகப்புணர்ச்சி யளவுரைக்க லாமே?
என்று தம் மணவாளன் அனுபவத்தைக் கூறிச் சுத்த மனதென்னுந் தோழியுடன் இன்புறும் ஆனந்தான்மா உலகியற் குடும்பம் பற்றி வாழவும் விரும்புமோ!



