
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
54. ஞான சபை
இப்படி பேருயிரிரக்கம் பூண்டு, ஆருயிர்கட்குப் பசியாற்றுந் தொண்டு புரிந்து தரும சாலையில் எழுந்தருளிய வள்ளலார் தமது சமரச வேதம் பரவுமாறு சமரச தரும் பாடசாலை யொன்று (பொது மறைக்கழகம்) அருகே யமைத்து அங்கு, சுத்த சத்திய சமரச சன்மார்க்க வேதமான அருட்பாவை அன்பர் ஓதி யுணர்ந்து அதன் வழி நிற்கச் செய்தார். அதற்கு அணித்தாக மற்றொரு நாற்பது காணி நிலத்தில் எல்லாரும் சமரசமாகக் கலந்து வணக்கம் செய்யத்தக்க அற்புத ஞான சபை யொன்று நிறுவினார். இச்செயல் திருவருள் நோக்கத்தால் திருவருள் வல்லபத்தாலேயே நிகழ்ந்தது. தாமரை வடிவில் எண்கோணமாக மிக அழகாயமைந்த அவ்வறிவு மன்றத்தின் அமைப்பை எழுதிக் கொடுக்கவே, அன்பர் ஐயாவின் அருள் வல்லபங்கொண்டு கட்டி முடித்தனர்.
இவ்வறநிலயக் கொடிமரத்திற்கு மரம் வாங்கச் சென்னை சென்றவர் ‘விலை அதிகம் சொல்லுகிறார்கள்’ என்று திரும்பி வந்தார். ‘நீர் முதலில் போம், நான் வருகிறேன்’ எனப் பணித்து, அடிகள் அவருக்கு முன்னேயே சென்னை சென்று மரத்தொட்டியில் வேண்டிய மரம், சகாயமாக வாங்கித்தந்து அவருக்கு முன்பே வடலூரில் தோன்றினார். இச்சமயம் வடலூரிலிருந்தவர்களும் ஐயர் தம்முடனிருப்பதைக் கண்டனர். இப்படி ஒரே காலத்தில் பல இடங்களில் இருப்பது நம் பெருமான் காட்டிய இயற் சித்துக்களி லொன்று.
மற்றொரு நாள் ஞான சபை மேல்விதானங் கட்டும்போது சாரம் முறிந்து மூவர் கீழே விழுந்தும் சிறிதும் காயப்படவில்லை. அறிவு மன்றம் முடிந்தது. அன்பர் தஞ்சை அலங்கார வேலைக் காரரைக் கொண்டு ஓர் அழகிய திருப்பந்தலமைத்தனர். அதில் வேலை செய்தவர்கள் புலாலருந்துவோர் ஆதலின் இம்மன்றம் திருவுளச் சம்மதமில்லை யென்று ஐயா கூறினார். உடனே ஒரு பெருமழை; இடி; பந்தல் சாம்பலாயிற்று. ஆனால் வேறொரு சேதமும் இல்லை.
அனைத்தினுஞ் சிறந்த சுடரே அச்சபையில் வணங்கப் படுகிறது. அச்சபைக்கு ஏழு சிற்சக்தி விளக்கமான (Seven Planes of Consciousness) ஏழு திரைகள் இட்டு, ஏழு மணி விளக்கங்கள் மிளிர்கின்றன. அடி நிலை, ஆதாரவெளி, நடு நிலை, இதயாம்பர வெளி, முடி நிலை, சிற்சபாரகசியாங்கித வெளி, உபயாம்பர மென்னும் செம்பொன்னம்பலம் ஆகிய ஏழும் வள்ளலாரின் அருள் நோக்கின்படி அமைந்தன. அங்குக் கற்பூர சோதி வழிபாடே நடக்கிறது! எல்லாம் அறிவு, அன்பு, தூய்மை, வாய்மை, அருள் விளக்கமே! தூய அருளிதயம் போன்ற ஒரு பெரிய நிலைக் கண்ணாடி வரவழைத்துத் தமது சித்திவளாகத் திருமாளிகையில் ஒரு திருவிளக்கின்முன் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு செய்து அவ்விரண்டையும் வள்ளலார் தைப்பூசத்தன்று ஞான சபையில் ஸ்தாபிக்கச் செய்தார். அன்று அருட்சோதி விளக்கங் காட்டினார். இவை யெல்லாம் அமைத்து, நம் குருமணிநாதன் மேட்டுக் குப்பத்தில் சித்திவளாகமெனும் சிற்றில்லில் எப்போதும் இன்ப நிஷ்டையில் இருந்து வந்தார்.
இடையிடையே அன்பர்கள் சித்தி விளக்கங்கள் பலவும் கண்டுவந்தனர். ஒருநாள் அன்பர் தம் தலைவருடன் ஆனித்திரு விழாக் காட்சிக்குச் சிதம்பரம் செல்ல நெடுநேரம் காத்துக்கொண் டிருந்தனர். ஐயா வரும் வழியைக் காணோம். சிலர் பொறுமை யற்றுப் புறப்பட்டு விட்டனர். பிறகு தருமசாலையில் ஓரிடத்தில் திரை தொங்கவிட்டு அதனுட் சென்று காணும்படி மீதி யன்பர்க்கு ஐயா பணித்தார்! ஆ! சிற்றம்பலக் காட்சி அங்குப் பொன்னொளிர்ந்தது. அன்பர் வியந்து போற்றிப் பணிந்தனர்.



