அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

31. விண்ணப்பம் ஏற்றருள் !

“கருணை வடிவான சிவமே பொருளெனக் கண்டு அறிவித்தவாறே அருணெறி யுள்ளேன். கொடுமனப் பிழைகளை நின்பால் விண்ணப்பித்தேன்; வேறு செயலிலேன். உயிரும் இரக்கமும் ஒன்றே; இரக்கம் என்னுயிர். காதலாலாடேன்; கருணையா லாடுவேன். தந்தையர் நோவத் தனயர் நடப்பரோ? எந்தையுன் பணிப்பை யான் எதிர்த்ததும் உண்டோ! வெம்பி வம்பு விளைத்த துண்டோ? கள்ளுங் கவறும் காமமும் உண்டோ? புலை கொலையென்றும் புரிந்ததுண்டோ? என்னை நீ பயிற்றப் பணிந்து படித்தனன். மனத்தில் வஞ்சம் மறைத்த துண்டோ? நின் மனம் வெறுப்ப நிந்தித்தேனா? அன்னையே அப்பா என்னுயிர்த் துணையென உன்னையே நினைத்து உட்குழைகின்றேன். திருவாசகப் பொருள், திருமந்திரப் பொருள், என்னுளே நீ யுணர்த்திய பொருள் இவற்றையே எண்ணியிருக்கின்றேன். நின் காதல் கடலினும் பெரிது! பரமனே! நின்னையே பார்ப்பறப் பார்த்திருக்கின்றேன். பிறர் மேல் இரக்கத்தால் பரிதவிக்கின்றேன். அச்சம் மயக்கம் ஆணவம் மாயை தவிர்த்துன் மெய்யருள் தந்தெனைக் காவாய் ! ஐயந்தீர்த்து உய்ய வை! இன்றேல் உயிரை விடுவேன்; என் விண்ணப்பம் ஏற்றருள் புரிவாய்!”

இதுவே வள்ளற் பெருமான் உள்ளக் கிடக்கை. இதுவே அவர் வாழ்வின் அருளோவியம். என்ன இரக்கம், உயிர்க்கருணை, தூய நினைப்பு !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !