அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

10. சோறு போடாதே

எம்பெருமானின் அருட்பெருமையை அண்ணல் சபாபதி பிள்ளையும் அறிய முடிந்திலர். “ஐயோ, தம்பி வீணாகிறானே; படிப்புமில்லை; பயனுமில்லை; குடிகெட்டது!” என்று கவன்றார். தம்பி தனக்கிசையாது மனப்போக்கு வேறாகி எதிலோ சித்தம் வைத்தாழ்ந்திருப்பதை அறியாது முனிந்தார். குறை கூறினார்; படித்துரைத்தார்; இடித்துரைத்தார்; ஒன்றும் பலிக்காது அலுத்து வெறுத்து முடிவில் தம்மனைவியை அழைத்து, “இராமலிங்கம் படியான்; என் சொற்படியான்; வீண்போது போக்கித் திரிகின்றான்; ஆதலால் அவனுக்கு வீட்டில் சோறு போடாதே, வேட்டி கொடுக்காதே, இருக்க இடந்தராதே” என்று சட்டஞ் செய்தார். அண்ணியார் கற்பிற் சிறந்த வாசுகி; கணவன் சொல்லைத் தடுக்கா திருப்பினும், எம்பிரான் மீது மிகவும் அன்புடையவர்; ஆதலால் பிள்ளையை அனாதரவாய் விட்டுவிட மனங் கொள்ளாராகிக் கணவனுக்குத் தெரியாமல் அவரை ஊட்டி வந்தார். தம் அண்ணன் வீட்டிலில்லாத வேளை அல்லது அயர்ந்திருக்கும் சமயம் இராமலிங்கப் பெருமான் புழைக்கடை வழியாக வருவார்; அப்போது அண்ணியார் தாயினும் பரிவுடன் மனங் குழைந்து, ஊணருத்தி, உடையளித்து, மருந்தினும் இனிய திருந்துமொழி கூறி வந்தார். இப்படிப் பன்னாட்கள் கழிந்தும் பையன் தன் வழியே பற்றி நின்றான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !