அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

35. பள்ளியறையில் திருவாசகம்

இவ்வாறு அடங்காச் சிவானந்த வெறியேறி, பாசபந்தங்களை உடைத் தெறியக் குமுறும் உள்ளம் மணத்தளைக் கடங்குமோ?

பலகால் வேண்டினர் தாயாரும் உடன்பிறந்தாரும்; “ஞான சம்பந்தர் திருமணக் கோலம் போல நினது திருமண அழகைக் காண வேண்டு”மென அவா மிஞ்சி ஒரு சிவயோகியாரைக் கொண்டு வற்புறுத்தினர். மனம் வேறுபட்ட அடிகளார் பெரியோர் வற்புறுத்தலுக்கு வாயுரை யளித்தார். உடனே தமக்கை உண்ணாமுலை யம்மையார் திருமகள் தனக்கோடியம்மாளை அடிகளாரின் வாழ்க்கைத் துணையாக வரித்தனர். வள்ளலாரோ தம் மணவாளனான ஞான நடத்தரசின் காதல் வெறிபிடித்து ஊனுறவுகளை மறந்து, சதாகால சகஜ நிஷ்டரானார். உலகியற் காதல் கனவிலுமற்ற உண்மைக் காட்சியாளரான வள்ளலார் மனை யென்றும், மக்களென்றும், மாடென்றும், உணவென்றும், உடை யென்றும் என்றும் அலையாது, உள்ளின்பந் திளைத்திருந்தார். இந்நிலை அறிவரோ இல்லறத்தார்? ஒருநாள் இரவில் பற்றற்ற இம் மணமகனையும், தாங்கள் விரும்பி மணஞ் செய்வித்த மணமகளையும் பள்ளியறைத் தனிமையில் ஒன்று கூட்டினர். எப்படியேனும் இல்லறத்தில் அவரைப் பிணிக்க வேண்டுமெனப் பலர் முயன்றனர். அடிகளார் என்ன செய்தார்? பெண்மயிலை ஏறிட்டுப் பார்த்தாரா? இல்லை. தமது அகத்திற் கோயில் கொண்ட மணவாளனை யெண்ணி யுருகினார்; உருகுதற்குத் திருவாசகத்தை ஓதி அவ்விரவு முழுதும் மெய்மறந்திருந்தார். இராமகிருஷ்ண பரம ஹம்ஸருக்கு சாரதா தேவி போன்று அமைந்த தனக்கோடி யம்மையாரும் தம் மணாளர் பிறர் போல் வாரல்லர், ஐந்தை யடக்கி அருள் வழி நிற்கும் ஞான வீரரெனக் கண்டு அவருடைய தூய நெறிக்குப் பழுது வராது நடந்து கொண்டார். ஞானம் முற்றிப் போயிற்று; இனிச் சித்தம் இக்கரை திரும்பாதென வீட்டிலுள்ளோரும் தமது முயற்சியில் அயர்ச்சி கொண்டனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !