
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
23. வியத்தகு செயல்கள்
இக்காலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் பல. சதா சகஜ நிஷ்டை கூடித் திருவொற்றியூருக்குச் சென்று வந்து கொண்டிருந்தார் வள்ளலார். ஒரு நாள் அங்குப் பட்டினத்தடிகளின் ஆலயத் தொண்டு புரிந்து வந்த முதிர்ந்த அம்மையாரொருவர் ‘அற்புதம் ஒன்று காட்டி யருள்க!’ எனவே, அவள் கையில் ஒரு பிடி மணலை வாரிக் கொடுத்து மூடிக் கொள்ளச் சொல்லிச் சென்றுவிட்டார். அவ்வம்மையார் கையைத் திறந்ததும் அம்மணல் சிறுசிறு சிவ லிங்கங்களாகத் தோன்றியது. ஒரு நாள், வியாசர்பாடியில் பிரசங்கம் புரிந்து இரவு நெடுநேரத்திற்குப் பின் நண்பர் பலருடன் வந்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய பாம்பு சீறி வந்தது; அனைவரும் அஞ்சியோடினர். அடிகள் மட்டும் அப்படியே நிற்கவே, பாம்பு அடிகளின் காலிற் சுற்றிக் கொண்டு சற்றிருந்து உத்தரவிட்டதும் சென்றுவிட்டது. மற்றொருநாள் இரு நண்பருடன் திருவொற்றியூர் செல்லும் வழியே மோகினிப் பிசாசு வந்து வழி மறித்தது. “பிச்” என்றார் ஐயர். உடனே ஓடி மறைந்தது. மற்றொரு நாள் மாணவர் பலருடன் ஒற்றியூர் செல்லுமிடையே பெரு மழை வரவே அனைவரையும் சட்டென்று ஒரு குறுக்கு வழியில் இட்டுச் சென்றார். உடனே எல்லாரும் ஒற்றியூர் கண்டனர். இத்தகைய நிகழ்ச்சிகள் பல.



